குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையின் போது பெண் இறந்தால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், கர்ப்பமானதால், தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யும் போது, பெண் இறந்தால் தரப்படும் இழப்பீடு தொகையானது ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ஒரு மாத காலத்தில் இறந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கருத்தடை அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடுத் தொகை ரூ.30,000-லிருந்து தற்போது ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.