கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைந்துள்ளதாகவும், நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12ம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என பதிவிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே உடற்சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்ததால் வைரஸ் உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார். இதனால் சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மருத்துவர்கள் தினமும் காலை, மாலை இருவேளையும் அவரது உடல்நிலையை கண்காணித்து தேவையான மாத்திரைகளை வழங்கி வந்தனர். அதே முதலமைச்சரின் உடல்நிலை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அறிக்கைகளும் வெளியிடப்பட்டு வந்தன.
இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக குணமடைந்தார். இதனால் அவர் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என காவேரி மருத்துவமனை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல் இன்னும் ஒரு வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.