கிழக்கு லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே இன்று 16-வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கிழக்கு லடாக் எல்லையில் சீனா ஊடுருவி ஆக்கிரமிக்க முயன்றதால் 2 ஆண்டுகளுக்கு முன்னர் இரு நாடுகளிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரிடையேயான மோதலை தவிர்க்க பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 15 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இப்பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் எல்லைப் பகுதிகளில் சில இடங்களில் இருநாட்டு ராணுவமும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இருநாடுகளிடையேயான கடைசி கட்டப் பேச்சுவார்த்தை மார்ச் மாதம் நடைபெற்றது. இந்தியப் பகுதியில் உள்ள சுஷுல்-மோல்டோ எல்லை சந்திப்புப் புள்ளியில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு தரப்பும் ஜனவரி 12-ந் தேதி நடைபெற்ற முந்தைய சுற்றில் இருந்து தொடர்புடைய தீர்வுக்காக தங்கள் விவாதங்களை முன்னெடுத்தன. மேற்குத் துறைப் பகுதியில் LAC எனப்படும் உண்மையான கட்டுப் பாட்டுக் கோடு தொடர்பான சிக்கல்கள், எஞ்சியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு தத்தமது அரசுத் தலைவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின்படி அவர்கள் விரிவான கருத்துப் பரிமாற்றம் செய்தனர். அத்தகைய தீர்வு மேற்குத் துறையில் எல்ஏசியில் அமைதி மற்றும் அமைதியை மீட்டெடுக்க உதவும் என்றும் இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை எளிதாக்கும் என்றும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
மேற்குத் துறையில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை தற்காலிகமாகப் பராமரிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கு இராணுவ மற்றும் இராஜதந்திர வழிகளில் உரையாடலைத் தொடர அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து லடாக்கின் இந்திய பகுதியான சுஷுல்-மோல்டோ புள்ளியில் இருநாட்டு ராணுவத்தரப்பு பிரதிநிதிகளிடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்று வருகிறது. நமது ராணுவத்தரப்பில் 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார்.
இந்தப் பின்னணியில் நேற்று லடாக் எல்லையில் உள்ள சீன ராணுவத்தினருடன் அந்நாட்டு அதிபர் ஜிங்பிங் நேற்று திடீரென ஆலோசனை நடத்தினார். லடாக் எல்லையோரத்தில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் சீனா அதிபர் ஜிங்பிங் 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் ஒரு பகுதியாக லடாக் எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் சீன ராணுவத்தினரை ஜிங்பிங் சந்தித்து பேசினார். லடாக் எல்லையில் சீன அதிபர் சந்தித்து பேசுவது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.