கலவரம் வருத்தமளிக்கிறது, மக்கள் அமைதி காக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

கலவரம் வருத்தமளிக்கிறது, மக்கள் அமைதி காக்க வேண்டும். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு, மாணவர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் இன்று நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதுடன், பள்ளி வளாகத்திற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்தனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.