மத்தியப் பிரதேசத்தில் நர்மதா ஆற்றில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நர்மதா ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலியானார்கள். 15 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

விபத்தில் சிக்கிய பேருந்து, மகாராஷ்டிர மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தாகும். இது இந்தூரிலிருந்து புனேவுக்குப் போய்க் கொண்டிருந்தது. ஆற்றில் உள்ள பாலத்தில் பஸ் போய்க் கொண்டிருந்தபோது திடீரென தடுமாறி தலைகீழாக ஆற்றில் கவிழ்ந்தது. பாலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு பேருந்து ஆற்றில் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் தர் மாவட்டத்தில் உள்ள கல்கட் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. விபத்தில் 13 பேர் நீரில் மூழ்கி பலியாகி விட்டனர். 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பஸ் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டு விட்டது.

பேருந்தில் 50 முதல் 60 பயணிகள் வரை இருந்ததாக கூறப்படுகிறது. எனவே உயிரிழப்பு அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மத்திய பிரதேச மாநிலம், தார் பகுதியில் நடந்த பஸ் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என் எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் உள்ளன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்து உள்ளார். அதன்படி, பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பேருந்து விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் மாநில அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கும் என்று முதல்வர் சௌகான் அறிவித்தார். மேலும் இறந்தவர்களின் உடல்கள் அவரவர் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார்.

தார்-கர்கோன் பகுதியில் கனமழை பெய்துவருவதால், சம்பவம் நடந்தபோது நர்மதா நதியில் தண்ணீர் அபாய அளவை தாண்டி ஓடி வருவதால் மீட்புப் பணி கடினமாகியுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மகாராஷ்டிர அரசுக்கு உறுதியளித்ததாக சௌகான் கூறினார்.

இதற்கிடையில், மகாராஷ்டிரா அரசு இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக முழு மருத்துவச் செலவையும் அறிவித்துள்ளது.