திமுக அரசு வெட்கத்தில் தலைகுனிய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு வன்முறை தொடர்பான விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசைக் கடுமையாகச் சாடினார்.

நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய இன்று தேர்தல் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற அலுவலகம், மாநிலச் சட்டசபை அலுவலகங்களில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி தமிழ்நாடு சட்டசபை அலுவலகத்திலும் குடியரசுத் தலைவர் தேர்தல் காலை தொடங்கி நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் நேரடியாக மருத்துவமனையில் இருந்து வந்து வாக்களித்தார். தொடர்ந்து பல்வேறு அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் வாக்களித்தனர்.

இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மூத்த நிர்வாகிகள் உடன் வந்து வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது தமிழகம் அமைதி பூங்கா என்ற நம்பிக்கையைப் புரட்டிப் போட்டு விட்டது. தமிழ்நாட்டில் காவல் துறையினர் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. போலீசார் சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை என்று நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார். இதற்காக திமுக அரசு வெட்கத்தில் தலைகுனிய வேண்டும்.

மாணவி உயிரிழந்தது முதலே அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உளவுத் துறை இதையெல்லாம் கவனித்து இருக்க வேண்டும். கவனித்து உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் நேற்று நடந்து வன்முறையை நிச்சயம் தவிர்த்து இருக்க முடியும். அரசின் அலட்சியப் போக்கால் தான் இந்த வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது.

அந்த பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் இப்போது கைது செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நடவடிக்கைகளை எல்லாம் அவர்கள் முன் கூட்டியே செய்து இருக்க வேண்டும். அந்த மாணவியின் பெற்றோர் வைத்த கோரிக்கையும் இது தான். இதையெல்லாம் இந்த அரசு முறையாகச் செய்து, முறையான விசாரணை செய்து இருந்தால் இந்த அசம்பாவிதத்தைத் தவிர்த்து இருக்க முடியும்.
ஆனால், இதையெல்லாம் செய்ய அரசு தவறிவிட்டது.

இந்த திமுக அரசு சுத்தமாகச் செயலற்ற அரசாகவே இருக்கிறது. ஏற்கனவே, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த சம்பவம் உங்களுக்குத் தெரியும். 30 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆட்சி செய்த, தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது அதிமுக. எங்கள் தலைமை அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் அத்துமீறி நுழைவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ராயப்பேட்டை போலீசார், சென்னை மாநகராட்சி ஆணையரிடமும் புகார் அளித்தோம். இவ்வளவு செய்தும் அரசும் போலீசாரும் முறையான பாதுகாப்பு அளிக்கவில்லை. ரவுடிகளுக்கும் குண்டர்களுக்கும் பாதுகாப்பு அளித்து எங்கள் கட்சி அலுவலகத்தில் நுழையவிட்டு, வேடிக்கை பார்த்த அரசு தான் இந்த அரசு. இப்படி இருக்கும் திமுக ஆட்சியில் வேறு எதை எதிர்பார்க்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.