அரசுப் பள்ளிக்கு மாற்றப்படும் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்கள்?

கள்ளக்குறிச்சி சக்தி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அருகி்ல் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்த மாணவி மர்மமான முறையில் மரணடைந்துள்ள சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக நேற்று அப்பகுதியில் வெடித்த வன்முறை சம்பவங்களின்போது பள்ளி சூறையாடப்பட்டதுடன், பேருந்துகள் உள்ளிட்ட பள்ளி வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பான வழக்கின் விசாரணையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சக்தி மேல்நிலைப் பள்ளிக்கு , தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ், அமைச்சர் எ.வ. வேலு உடன் இன்றுதான் நேரில் சென்று ஆ்ய்வு மேற்கொண்டார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி சக்தி மேல்நிலைப் பள்ளியில் பயின்றுவரும் மாணவர்களை அருகில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாணவியின் பெற்றோர் தாக்கல் செய்துள்ள வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தவறு யார் மீது இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விவகாரத்தை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வது சரியல்ல. மாணவியை இழந்த பெற்றோரின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தமிழகத்தில் அரசின் முன் அனுமதி இல்லாமல் தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிக்க கூடாது. மாநிலத்தில் தனியார் பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவி்த்தார்.

என்ன காரணம்?: இறந்த மாணவி ஸ்ரீமதியின் உற்றார், உறவினர் எனக் கூறி, வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் சக்தி மேல்நிலைப் பள்ளிய் அடித்து உடைத்து சூறையாடி உள்ளனர். வன்முறையில் சேதமடைந்த பள்ளியை சீரமைக்க இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால், அங்கு பயின்றுவரும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக. அவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றும் நடவடிக்கையில் அரசு மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

முன்னாள் மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில் கலவரம் நடத்தப்பட்டது. வெளியூரைச் சேர்ந்த பலரும் முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில் வன்முறை செய்துள்ளனர். பேருந்துகளைக் கொளுத்தியது ஏன்? வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. மாணவி உயிரிழந்த மறுநாளே அமைச்சர் சி.வி. கணேசன் தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். 3000க்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளன. அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் திட்டமிட்டு கலவரம் நடைபெற்றுள்ளது. நீதி கேட்கப் போனவர்கள் மாணவர்களின் சான்றிதழ், பேருந்துகளைக் கொளுத்தியது ஏன்?

எந்த அமைப்பாக இருந்தாலும் அமைதியாகப் போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். போலீசார் நடவடிக்கையால் துப்பாக்கிச் சூடு இல்லாமல் போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறியக் குழு அமைக்கப்படும். கலவரத்தை முன்னின்று நடத்தியது யார் என்பதை அந்தக் குழு கண்டறியும். கலவரம் தொடர்பான கைதுகளில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. கலவரத்திற்குக் காரணமாக அனைவரும் நிச்சயம் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். நாளை மாணவியின் உடற்கூராய்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து நேற்றைய கலவரத்தின்போது காயமடைந்த போலீசாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நேற்றைய கலவரத்தின்போது காயமடைந்த 74 போலீசார் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் 44 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 44 போலீசாரை சந்தித்து அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, சி.வி. கணேசன் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.