கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு!

இந்தியாவில் முதல் முறையாக கேரளத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட மூன்று நாள்களில், இரண்டாவது பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை கூறுகையில், குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, முகம், வாயின் உள்பகுதி மற்றும் உடலின் பிற பகுதிகளில் சொறி அல்லது சிரங்கு போன்ற பாதிப்பு ஏற்படும். இவை இருந்தால் நிச்சயமாக ஒருவர் மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்த நோய், உடலில் ஏற்படும் கொப்பளங்களின் நீர் வழியாகப் பரவும் அபாயம் இருக்கலாம். எனவே, குரங்கு அம்மை பாதித்தவர்கள் தங்களது உடலை மூடியபடி இருப்பது நோய் பரவலைத் தடுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், கேரளத்தில் இரண்டாவது குரங்கு அம்மை நோய் கன்னூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் பரியாராம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 13ஆம் தேதி அவர் துபையிலிருந்து கேரளம் திரும்பியதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அமீரககத்திலிருந்த கடந்த வியாழக்கிழமை கேரளம் வந்த நபருக்கு முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று இரண்டாவது பாதிப்பும் உறுதியாகியுள்ளது.