இலங்கையில் அதிபர் பதவிக்கு நாளை மறுநாள் தேர்தல் நடத்தப்படுகிறது அதிபர் தேர்தலையொட்டி வன்முறை பரவாமல் இருக்க இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்ததையடுத்து அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். பின்னர் அவர் பதவி விலகினார். அவர் ராஜினாமா செய்ததையடுத்து, காலியாக இருக்கும் அதிபர் பதவிக்கு நாளை மறுநாள் (ஜூலை 20) தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி வன்முறை பரவாமல் இருக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் இன்று முதல் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பிறப்பித்தார். இதன்மூலம் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றுதல், கைது செய்தல் போன்ற அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
கோத்தபய ராஜபக்சே பதவி விலகினாலும், எதிர்ப்பை கைவிடாத போராட்டக்காரர்கள் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த அரசு அமைப்பையும் மாற்றும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்து உள்ளனர்.
இந்தநிலையில், பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு பல்வேறு சலுகைகளை ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களை பயிரிட்ட விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் விலையும் குறைக்கப்படும். எரிபொருள் விநியோகத்தில் ஜூலை மாதம் கடினமான காலமாக இருக்கும். எவ்வாறாயினும், டீசல் இருப்புக்கள் பாதுகாக்கப்பட்டு அனைவருக்கும் விநியோகிக்கப்படும், ஜூலை 21 முதல் பெட்ரோலும் விநியோகிக்கப்படும். நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தனி மனிதர் மீதான கருத்து வேறுபாடுகளால் நாடு பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். மேலும் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மேலும் வெளிநாடுகளுடனான உதவிக்கான கலந்துரையாடல்களும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.