தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணத்தை உயர்த்த அரசு உத்தேசித்துள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக அறிவித்துள்ளார். மின் கட்டணத்தை உயர்த்த கோரி, மத்திய அரசு 28 முறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி இழப்பு 2011-2012-ம் ஆண்டில் ரூ.18 ஆயிரத்து 954 கோடியாக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் ரூ.94,312 கோடியாக அதிகரித்து, 2021-ம் ஆண்டு மார்ச் வரை ரூ.1,13,266 கோடியாக உயர்ந்துள்ளது. மின்சார வாரியத்தின் இழப்பை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற நிலைப்பாட்டை முந்தைய காலத்தில் எடுக்கப்படாததால் மின்சார வாரியம் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
2011-2012-ம் ஆண்டில் மின்சார வாரியத்திற்கு ரூ.43,493 கோடி கடன் இருந்தது. இது 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து ரூ.1,59,823 கோடியாக உள்ளது. இதனால் வட்டி ரூ.16,511 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2011-2012-ம் ஆண்டில் ரூ.16,488 கோடியாக இருந்த மின்கொள்முதல் கட்டணம் 2021-ம் ஆண்டில் ரூ.37,430 கோடியாக உள்ளது. மத்திய அரசின் மின் அமைச்சகத்தால் மாநிலத்திற்கு 0.5 சதவீத கூடுதல் கடன் வாங்குவதற்கு கட்டண திருத்தத்துடன் மின் சீர்திருத்தங்களின் கட்டாய நிபந்தனையை உருவாக்கி உள்ளது. மத்திய அரசின் மின் அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி 10 சதவீதம் வெளிநாட்டு நிலக்கரியை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தற்போது திருத்தியமைக்கப்பட்ட மின் கட்டணத்தை அமல்படுத்துவதற்கு உரிய மனு தமிழ்நாடு ஒழுங்குறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
வீட்டு உபயோகிப்பாளர்கள் ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கட்டணத்தை இணைய வழி மூலம் கட்டாயமாக செலுத்த வேண்டும். ஒரு வீட்டில் கூடுதலாக வாடகை, குத்தகைக்கு விடப்பட்டதை தவிர மற்ற கூடுதல் மின் இணைப்பிற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.225 வசூலிக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்படும் பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்களுக்கான வணிக விகித பட்டியலில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளின் கட்டண விகிதத்தின் கீழ் மாற்ற உத்தேசிக்கப்பட்டு உள்ளது. மின் மயானம், அங்கன்வாடி மையங்கள் பொது வசதிகள், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள், சத்துணவு மையங்கள் ஆகியவற்றை வீட்டு விகித பட்டியலில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளின் கட்டண விகிதத்தின் கீழ் மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளின் நேர மின் கட்டண விகிதம் என்பது காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள், அவை கூட்டுகை மையங்கள் அபரிதமான வெளிச்சம் பயன்பாட்டிற்கு தனியாக தற்காலிக மின் விகித பட்டியலில் மின் இணைப்பு பெறாமல் அதே மின் இணைப்பில் 5 சதவீத கூடுதல் கட்டணத்துடன் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவுதான். மாதாந்திர மின் கணக்கீடு என்று வரும்போது, இப்போதுள்ள மின் கணக்கீட்டாளர்கள் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்த வேண்டும். எனவே இதையெல்லாம் கவனத்தில் கொண்டு வருகிறோம். வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டால் மின் கணக்கீட்டாளர்கள் தேவை இல்லை. தற்போது ஸ்மார்ட் மீட்டர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வீடு மற்றும் குடிசைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இவவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும். இதேபோன்று விசைத்தறிகளுக்கான 750 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கும் திட்டமும் தொடரும். 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என்று விரும்பினால், அதுகுறித்து நுகர்வோர் தாமாக முன்வந்து அரசுக்கு தெரிவிக்கலாம் என்று அமைச்சர் செந்தில பாலாஜி அறிவித்துள்ளார்.
அதேசமயம், 100 -200 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர் கூடுதலாக 27.50 ரூபாய் செலுத்தும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், 201 – 300 யூனிட் வரை – ரூ .72.50, 301-400 யூனிட் வரை – ரூ .147.50 மற்றும் 401 -500 யூனிட் வரை உபயோகிக்கும் நுகர்வோர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 297.50 அதிகமாக செலுத்தும் விதத்தில் மின் கட்டணத்தை அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அத்துடன் ‘ஒரு வீடு ஒரு மின் இணைப்பு’ திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.