மத்திய அரசின் தடையை மீறி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று விலைவாசி உயர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் ஆகஸ்ட் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதன் பின்னர் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கின. ராஜ்யசபாவில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றனர். நாடாளுமன்ற இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினர்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் 2-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் மத்திய பாஜக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி விவகாரம் உள்ளிட்டவைகளை முன்வைத்து காங்கிரஸ் எம்.பிக்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர். இதில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட வார்த்தைகளை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்தது; அதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் மத்திய அரசின் தடையை மீறி இன்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
இப்போராட்டம் தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், விலைவாசி உயர்வு, பணவீக்க விகிதம், ஜிஎஸ்டி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராகவும் இப்போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து இப்போராட்டத்தை நடத்துகிறோம் என்றார்.
ராஜ்யசபா எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், 53 ஆண்டுகளுக்கு முன்னர் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்ட நாள் இன்று. ஆனால் மத்தியில் ஆளும் மோடி அரசாங்கமோ, வங்கிகளை தனியார்மயமாக்கி உள்ளது. வங்கிகள் விற்பனைக்கு எதிரான மசோதாவை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது என்றார். ராஜ்யசபாவில் திமுக, இடதுசாரி எம்.பிக்கள் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
இதனிடையே ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபாவிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் லோக்சபா நடவடிக்கைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.