வாக்குறுதி அளித்தது வேறு, இப்போது மக்கள் தலையில் இடியை இறக்குகிறார்கள். இதுதான் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ? என டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மக்களை பாதிக்காத வகையில் மின்கட்டணம் உயர்த்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனசாட்சியோடு யோசித்துப் பார்த்து தி.மு.க அரசு மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தி.மு.க அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு மின்கட்டண உயர்வு என்ற அடுத்த பரிசை வழங்கியிருக்கிறது. விடியல் ஆட்சி தரப்போவதாக சொன்னவர்களின் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களின் தலையில் இடியாகவே விழுந்து கொண்டிருக்கிறது. மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப் போவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இப்போது அதைப்பற்றி வாய் திறக்காமல், மின்சார கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். இதுதான் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ?” என டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், “ஏற்கனவே, நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களையும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நிலையையும் மனசாட்சியோடு யோசித்துப் பார்த்து தி.மு.க அரசு மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.