சோனியா காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். டெல்லியில் போராட்டம் நடத்திய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், அஜய் மக்கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணைக்காக மகளும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா, ராகுல் காந்தியுடன் அமலாக்கப் பிரிவு அலுவலகம் சென்றார் சோனியா காந்தி. ஏற்கனவே மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கப் பிரிவு பல நாட்கள் விசாரித்தது. அப்போது டெல்லி மற்றும் நாட்டின் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். இதேபோல இன்றும் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியிலும் பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், அஜய் மக்கான் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். மகாராஷ்டிராவின் நாக்பூரில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் தர்ணா போராட்டம் நடத்தினர். ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகரிலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மும்பையில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நானா படோல் தலைமையில் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர். அப்போது, சோனியா காந்தியை அவமதிக்கும் வகையில்தான் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்துகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய பாஜக அரசின் காங்கிரஸுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை இது என்றார் நானா படோல்.
பெங்களூருவில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிவகுமார் தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது பேசிய சிவகுமார், சோனியா காந்தியை துன்புறுத்தவே இந்த விசாரணை நடத்தப்படுகிறது. சோனியா காந்தியை பார்த்து அச்சப்படுகிறது பாஜக. ஆகையால் காங்கிரஸ் தலைவர்களை பாஜக சித்ரவதை செய்கிறது என்றார்.
டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
மோடி அரசு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைக்காக முன்பு தலைவர் ராகுல் காந்தி, இன்று அன்னை சோனியா காந்தி மீதும் அமலாக்கத் துறையை ஏவிவிட்டு விசாரணை என்ற பெயரில் அராஜகம் செய்து கொண்டிருக்கிறது. அரிசி, பால், தயிர், பென்சில், மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு என்று அனைத்திற்கும் கொடுமையான வரி விதிக்கும் மக்கள் விரோத மோடி அரசிற்கு எதிராக, காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இதனால் அமலாக்கத்துறையை ஏவி விட்டு காங்கிரஸ் கட்சியை அலைக்கழிக்கலாம் என்று மோடி அரசு நினைக்கிறது. இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சி அஞ்சாமல் களத்தில் நிற்கும். மக்கள் விரோத மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயாமல் போராடுவோம். இன்று நடைபெற்ற போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளோம். இவ்வாறு ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.