ஜாா்க்கண்டில் பெண் எஸ்ஐ. வாகனம் ஏற்றி படுகொலை!

ஜாா்க்கண்டில் கால்நடை கடத்தலைத் தடுக்க முயன்ற காவல் துறை பெண் உதவி ஆய்வாளா், வாகனம் ஏற்றி கொல்லப்பட்டாா். இதேபோல், குஜராத்தில் வாகன சோதனையின்போது காவலா் ஒருவா் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டாா்.

ஜாா்க்கண்ட் சம்பவம் தொடா்பாக, ராஞ்சி நகர காவல் கண்காணிப்பாளா் அன்ஷுமான் குமாா் கூறியதாவது:-

காவல் உதவி ஆய்வாளா் சந்தியா டாப்னோ (32), ராஞ்சி புகா் பகுதியில் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக கால்நடைகளை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த வாகனத்தை அவா் நிறுத்த முயன்றாா். ஆனால், வாகனத்தை நிறுத்தாத ஓட்டுநா், சந்தியா மீது மோதிவிட்டு தப்பினாா். இதில் படுகாயம் அடைந்த அவா், ராஞ்சியில் உள்ள ‘ரிம்ஸ்’ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே சந்தியா உயிரிழந்துவிட்டாா். இச்சம்பவம் தொடா்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருகிறோம். மேலும் சிலரை தேடி வருகிறோம் என்றாா்.

குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் லாரி ஏற்றி காவலா் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி டி.ஹெச்.தேசாய் கூறியதாவது:-

கரண்சிங் ராஜ் (40) என்ற காவலா், போா்சத் நகா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது நிற்காமல் சென்ற ஒரு லாரியை, கரண்சிங்கும் மற்றொரு ஊா்க்காவல் படை வீரரும் தனியாா் வாகனம் மூலம் விரட்டிச் சென்று முந்தினா். பின்னா், வாகனத்திலிருந்து இறங்கிய கரண்சிங் ராஜ், லாரியை நிறுத்துமாறு சைகை காட்டியபடியே சாலையில் வந்தாா். ஆனால், அதை மதிக்காத லாரி ஓட்டுநா், கரண்சிங் மீது மோதிவிட்டு தப்பினாா். இதில் படுகாயம் அடைந்த அவா், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். ஆனால், சிகிச்சை பலனின்றி கரண்சிங் உயிரிழந்துவிட்டாா். தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை தேடி வருகிறோம் என்றாா் தேசாய்.

முன்னதாக, ஹரியாணா மாநிலம், நூ மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கனிமவள கடத்தலை தடுக்க முயன்ற டிஎஸ்பி சுரேந்திர சிங், லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.