ஜெயலலிதாவின் நினைவுப் பரிசுகள் உள்ளிட்டவற்றை காணவில்லை: சி.வி.சண்முகம்!

அதிமுக தலைமை அலுவவகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் நினைவுப் பரிசுகள் உள்ளிட்டவற்றை காணவில்லை என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறினார்.

கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தம்மை கூறிக் கொள்ளும் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து, தமது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் தர்ணா மேற்கொண்டார். அப்போது ஓபிஎஸ் -இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் வெடித்ததையடுத்து, மயிலாப்பூர் வருவாய் கோட்ட வட்டாசியர் அதிமுக அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தார். இந்த சீலை அகற்றி அலுவலகத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் இருதரப்பினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி தான் சொந்தம் எனக் கூறி தீர்ப்பளித்தது. இதனையடுத்து, அலுவலக கட்டடத்தை அதன் மேலாளரும், இபிஎஸ்சால் அங்கீகரிக்கப்பட்ட முகவருமான மகாலிங்கத்திடம் அரசு நிர்வாகம் இன்று காலை 11 மணி அளவில் ஒப்படைத்தது. அதிமுக தலைமை அலுவலகத்தின் பிரதான கேட் மற்றும் கதவில் இருந்த ‘சீல்’ தாசில்தாரால் அகற்றப்பட்டது. சீல் அகற்றப்பட்டதற்கான ஆவணங்கள் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. சாவி மேலாளர் மகாலிங்கத்திடம் தரப்பட்டது. பின்னர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் அலுவலகத்தை பார்வையிட்டனர். அதன் பின்னர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-

அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை காணவில்லை. அவை அனைத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு காலகட்டங்களில் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டவை. இவற்றில் ஜெயலலிதாவின் செங்கோல், வெள்ளிவேல் ஆகியவையும் காண காணாமல் போய் உள்ளன.
அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவ சிலையும் தொலைந்து போய் உள்ளது. இதுதொடர்பாக இபிஎஸ் இடம் தெரிவிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சி.வி.சண்முகம் கூறினார்.

ஜூலை 11 ஆம் தேதி சம்பவத்தன்று, அலுவலக ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பினர் ஒரு வேனில் ஏற்றி செல்வது போன்ற வீடியோ வெளியாகி இருந்த நிலையில், அலுவலகத்துக்குள் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் காணவில்லை என்று சிவி சண்முகம் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

முதல் தளத்தில் தலைமை கழகத்தின் முக்கிய அலுவலகம் உள்ளது. அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. மேஜை, கம்ப்யூட்டர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நிர்வாகிகள் கூட்டங்கள் நடைபெறும் அறையில் எடப்பாடி பழனிசாமி படம் இருந்த பேனர் கிழிக்கப்பட்டு இருந்தது. 2-வது தளத்தில் நூலகம் உள்ளிட்ட அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. 3-வது தளத்தில் கட்சியின் கணக்கு வழக்குகளின் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறை கதவு உடைக்கப்பட்டது. அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு கணக்கு விவரங்களின் முக்கிய ஆவணங்கள் மாயமாக இருந்தது. அதேபோல் மற்றொரு அறையில் ஜெயலலிதாவுக்கு கட்சி சார்பில் வழங்கப்பட்ட பரிசு பொருட்களும் அவர் கட்சிக்கு வழங்கிய பரிசு பொருட்களும் வைக்கப்பட்டு இருந்தது. அந்த அறைகளை இரும்பு கடப்பாறையால் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த அறையில் இருந்த பரிசு பொருட்கள் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து அ.தி.மு.க. அலுவலக மேனேஜர் கூறும்போது, அலுவலகத்தின் 3-வது மாடியில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பொருட்களை காணவில்லை. கம்ப்யூட்டரில் இருந்த ஹார்டு டிஸ்க், கணக்கு விவர ஆவணங்கள் அனைத்தும் மாயமாகி இருக்கிறது என்றார்.