இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று பதவி விலகுமாறு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினா். போராட்டம் தீவிரமானதால் நாட்டைவிட்டு வெளியேறிய அவா், அதிபா் பதவியை ராஜிநாமா செய்தாா். முன்னதாக, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கவை அவா் கடந்த 13-ஆம் தேதி நியமித்தாா்.
இந்நிலையில், புதிய அதிபரைத் தோ்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் இடைக்கால அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி எம்.பி. டலஸ் அழகப்பெரும, ஜனதா விமுக்தி பெரமுன தலைவா் அனுர குமார திசநாயகே ஆகியோர் போட்டியிட்டனர். 225 உறுப்பினா்களைக் கொண்ட அவையில் 223 போ் வாக்களித்தனா். அவற்றில் 4 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன. 219 வாக்குகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு, தோ்தல் முடிந்தவுடன் எண்ணப்பட்டன. அதில், ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளைப் பெற்றாா். அனுரா குமார 3 வாக்குகள் மட்டுமே பெற்றாா். தோ்தல் முடிவுகளை நாடாளுமன்ற அவைத் தலைவா் மகிந்த யாபா அபயவா்தன அறிவித்தாா்.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் முதல்முறையாக அதிபராக ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். இவர் அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சவின் பதவிக் காலமான 2024-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வரை அதிபராகப் பதவி வகிப்பார்.