ஆவின் பொருட்களின் விலை உயர்வை, உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று, தமாகா தலைவர் ஜிகே வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ஆவின் நிறுவனம் ஆவின் பொருட்களுக்கான விலையை உயர்தியது. எனினும் தற்போது, மேலும் விலையேற்றத்தை அறிவித்துள்ளது. பல தனியார் நிறுவனங்கள் தயிர், லஸ்சி, மோர் ஆகியவற்றின் விலையை ரூ.4 முதல் ரூ.10 வரை உயர்த்தி உள்ள நிலையில் ஆவினும் உயர்த்திவிட்டது. நெய்யின் விலை ரூ.5 ல் இருந்து ரூ .45 வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், தமாகா தலைவர் வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழக அரசின் ஆவின் நிறுவனம், நெய் , தயிர் மற்றும் பல்வேறு பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் தான் ஆவின் நிறுவனம் ஆவின் பொருட்களுக்கு விலையேற்றம் செய்தது. ஆனால் குறுகிய காலத்திற்குள் மேலும் விலையேற்றத்தை அறிவித்துள்ளது ஏழை, எளிய மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ஏழை, எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், அத்தியாவசிய பொருட்களாக இருக்கும் தயிர் மற்றும் நெய்யின் விலை ரூ.5 ல் இருந்து ரூ.45 வரை உயர்த்தியுள்ளது மக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கி இருக்கிறது.
பொருளாதார ரீதியில் இவ்வேளையில் தமிழக அரசு, மின்கட்டணத்தை உயர்த்தியும் ஏழை மக்கள் மீது விலையேற்றியும், மென்மேலும் சுமையை ஏற்றுகிறது . சிரமப்படும் அரசு நிறுவனமான ஆவினே விலையேற்றும் செய்யும் பொழுது தனியார் நிறுவனங்களும், அவர்களது பொருட்களுக்கு மேலும் விலையேற்றம் செய்ய மிகுந்த வாய்ப்புள்ளது. எனவே ஏழை, எளிய மக்களின் நலன் கருதி ஆவின் நிறுவனம் அறிவித்த விலையேற்றத்தை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜி.கே. வாசன் குறிப்பிட்டுள்ளார்.