இந்திய நாட்டின் ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோர் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .
நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 771 எம்பிக்களில் 763 பேரும், 4,025 எம்எல்ஏக்களில் 3,991 பேரும் வாக்களித்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. முதல் சுற்றில் எண்ணப்பட்ட எம்பிக்களின் வாக்குகளில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு 540 எம்பிக்களும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட யஷ்வந்த் சின்ஹாவுக்கு 204 எம்பிக்களும் வாக்களித்திருந்தனர். இரண்டு மற்றும் முன்றாம் சுற்றுக்களில் எண்ணப்பட்ட எம்எல்ஏக்களின் வாக்குகளையும் முர்மு அமோகமாக பெற்று நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவராகிறார். மொத்தம் பதிவான வாக்குகளில் திரௌபதி முர்மு பெற்ற ஓட்டுக்களின் மதிப்பு – 6.78 லட்சம், யஷவந்த் சின்ஹாவுக்கு விழுந்த வாக்குகளின் மொத்த மதிப்பு 3.8 லட்சம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிட்டதட்ட 50% வாக்குகள் வித்தியாசத்தில் முர்மு வெற்றி பெற்றுள்ளார்.
தேசத்தின் முதல் குடிமகள் ஆக உள்ள முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை பெறும் திரௌபதி முர்மு வரும் 25 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “பழங்குடி இனத்தை சேர்ந்த இந்தியாவின் மகள் ஒருவர், இந்தியாவின் ஜனாதிபதி ஆகி இருப்பதை ஒட்டுமொத்த இந்தியர்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். திரவுபதி முர்மு மிகவும் கடினப்பட்டு முன்னேரி, மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்றி உள்ளார். அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். இந்தியக் குடிமக்களுக்கு நம்பிக்கை நிறைந்தவராக திகழ்கிறார், குறிப்பாக ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும். சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் இருந்தபோது தனது கடமையை சிறப்பாக செய்துள்ளார் முர்மு. அவர் முன் நின்று இந்தியாவை வலிமையான பாதையில் வழிநடத்துவார். திரௌபதி முர்முவின் வெற்றிக்காக வாக்களித்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு நன்றி ” என்று குறிப்பிட்டுள்ளார்.
திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின், “இந்தியாவின் உயரிய அரசியலமைப்பு பதவியான குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த தாங்கள் அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் குரல் கொடுப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு அரசியல் பிரமுகர்கள் இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.