கள்ளக்குறிச்சி மாணவி: நாளை இறுதி சடங்கு: பாதுகாப்பு தீவிரம்!

கள்ளக்குறிச்சி மாணவி உடலை நாளை பெற்றுக்கொள்வதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளது.

சின்ன சேலம் மாணவி மரணமடைந்ததை அடுத்து, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று காலை உத்தரவிட்டிருந்தார். மேலும் மாணவியின் பெற்றோர்களிடம் மாணவி இறந்து 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், எப்போது உடலைப் பெற்றுக் கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதுடன், உடலை பெற்று கண்ணியமான முறையில் இறுதி சடங்கு நடத்தும்படியும், மகளின் ஆன்மா இளைப்பாறட்டும் என்றும் தெரிவித்தார்.

மகளின் உடலை நாளை நண்பகல் 11 மணிக்குள் பெற்றுக்கொள்வீர்கள் என நம்புவதாக தெரிவித்த நீதிபதி, அவ்வாறு பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல் துறை சட்டப்படி இறுதிசடங்குகளை நடத்தலாம் எனவும் அறிவுறுத்தினார். எப்போது உடலை பெறுவீர்கள் என மனுதாரர் தரப்பை கேட்டு இன்று 12 மணிக்கு தெரிவிக்கும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார். 12 மணிக்கு மீண்டும் நடைபெற்ற விசாரணையின் போது நாளை உடலை பெற்றுக் கொள்வதாக மாணவியின் பெற்றோர் தரப்பு கூறியுள்ளனர். காலை 6 முதல் 7 மணிக்குள் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் நாளை மாலைக்குள் இறுதி சடங்கை முடித்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவியின் உடலை பெற்றோர் நாளை பெற்றுக்கொள்ள உள்ள நிலையில் போலீஸார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் மாணவியின் சொந்த ஊர் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து கடலூரில் மாணவியின் உடலை அடக்கம் செய்வதற்காக அவரது சொந்த ஊரில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவியில் உடலானது அவரது ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. மாணவியின் இறுதி சடங்கில் அவரது உறவினர்களும் பொதுமக்களும் அமைதியாக கலந்து கொள்ளலாம் எனவும், தேவையற்ற இடங்களில் கூட்டம் கூட கூடாது. தேவையில்லாத தகவல்களை வதந்தியாக பரப்பக் கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.

தற்போது மயானத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பெரிய நெசலூர் கிராமத்தை சுற்றி பன்னிரண்டு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் இறுதி சடங்கு செய்ய அனைத்து விதமான ஏற்பாடுகளையும் பாதுகாப்புகளையும் காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கிராமத்திற்குள் யார் யார் வருகிறார்கள் என்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.