டோக்லாம் எல்லையில் சீன கிராமம்: மத்திய அரசு விளக்கம்!

இந்தியா, சீனா, பூடான் எல்லையில் அமைந்துள்ள டோக்லாம் பகுதிக்கு அருகே, சீனா புதிய கிராமத்தை அமைத்து வரும் விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2017ல் சீனா, இந்தியா, பூடான் எல்லையில் அமைந்துள்ள டோக்லாம் பகுதியில் சீனாவும், இந்தியாவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.அங்கு சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட சீன ராணுவத்தினரை நம் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், டோக்லாம் அருகே, 9 கி.மீ., தொலைவில் பூடானுக்கு சொந்தமான பகுதியில் கிராமங்களை அமைக்கும் பணியில் சீன ராணுவம் ஈடுபட்டுள்ளது செயற்கைக்கோள் புகைப்படம் வாயிலாக கடந்த ஆண்டு உறுதி செய்யப்பட்டது. பாங்டா என பெயர் சூட்டப்பட்ட இந்த கிராமத்தில் மக்கள் தற்போது முழுமையாக குடியேறி உள்ளனர். பெரும்பாலான வீட்டு வாசல்களில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது.

இது குறித்து நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:-

நம் அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அங்கு நடந்து வரும் அனைத்து முன்னேற்றங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நம் நாட்டின் எல்லை மற்றும் பாதுகாப்புக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள செயற்கைக்கோள் படங்கள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த படங்களை மேக்ஸர் எனும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது. மேலும் புதிய கிராமங்களை உருவாக்கவும் சீனா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன. சீனாவின் திட்டப்படி தற்போது 2வது கிராமத்தின் கட்டமைப்புகள் முடிவுற உள்ளதாகவும், மேலும் 3வது கிராமத்தை உருவாக்க முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கிராமங்கள் மட்டுமல்லாது அதன் அருகில் உள்ள ‘அமோ சூ’ ஆற்றில் பாலத்தை கட்டவும் சீனா திட்டமிட்டுள்ளது. ஒருவேளை பாலம் கட்டிவிட்டால் சீனாவின் படைகள் எளிதில் இங்கு வந்துவிடும். இதனால் இரு நாட்டு எல்லையிலும் புதிய பதற்றம் உருவாகும். இவ்வாறு சீனா பாலம் கட்டிவிட்டால் டோக்லாம் பகுதிக்கு சீன படைகள் எளிதில் வந்துவிடும் என்பதை கடந்து, இது சிலிகுரி பகுதியை எளிதாக கண்காணிக்க முடியும் என்கிற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிலிகுரி என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஒன்றிணைக்கும் ஒரு பகுதியாகும். இதிலிருந்து இந்த பாலம் கட்டுவதன் நோக்கம் என்னவென்று நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

“ஜம்பேரி மலைமுகடு மற்றும் டோக்லாம் மீது சீனர்கள் தங்கள் சட்டப்பூர்வமான உரிமையை நிலைநாட்ட முயற்சிப்பதற்கு பங்டா கிராமமும் அதன் வடக்கு மற்றும் தெற்கே உள்ள கிராமங்களும் சிறந்த எடுத்துக்காட்டுகள்” என இந்தியாவின் கிழக்கு ராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் பிரவீன் பக்ஷி கூறியுள்ளார்.