இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் 14 நாட்கள் தங்கி இருப்பதற்கான அனுமதி சீட்டை சிங்கப்பூர் அரசு அளித்துள்ளது.
இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார். 13-ந் தேதி இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். அங்கு எதிர்ப்பு எழுந்ததால், சிங்கப்பூர் சென்றார். தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தங்களிடம் தஞ்சம் கேட்கவில்லை என்றும், அவருக்கு தஞ்சம் அளிக்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே பயணம் தொடர்பான பத்திரிகைகளின் கேள்விகளுக்கு சிங்கப்பூர் குடியேற்ற ஆணையம் நேற்று விளக்கம் அளித்தது. அந்த ஆணையம் கூறியிருப்பதாவது:-
தனிப்பட்ட பயணமாக கோத்தபய ராஜபக்சே கடந்த 14-ந் தேதி சிங்கப்பூருக்கு வந்தவுடன் அவருக்கு 14 நாட்கள் தங்குவதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. பொதுவாக இலங்கையை சேர்ந்தவர்கள் சிங்கப்பூருக்கு வரும்போது, 30 நாள்வரை தங்குவதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டு வழங்கப்படும் அதற்கு மேல் தங்குவதை நீட்டிக்க விரும்பினால், அவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டி இருக்கும். தகுதி அடிப்படையில் அவை தனித்தனியாக பரிசீலிக்கப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது.
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்க எதிராக பல இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால், சட்டத்தின்படி கையாள்வோம் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை வளாககத்திற்கு வெளியே ஆயுதம் ஏந்தி ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. உடனடியாக அங்கிருந்த போராட்டக்காரர்கள் தடுப்பு வேலிகளை அகற்ற முயற்சித்த நிலையில் அதை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டக்காரர்களின் கூடாரங்களை அப்பறப்படுத்தும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர். இந்த அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.