மின் கட்டண உயர்வுக்கு ஒன்றிய அரசும், அதிமுக அரசும்தான் காரணம்: செந்தில்பாலாஜி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு ஆகியவற்றை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்த தயாரா என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். இதற்கு மின்சார வாரியத்தின் கடன் மற்றும் மத்திய அரசின் அழுத்தம் ஆகியவையே காரணம் என்று விளக்கமளிக்கப்பட்டது. இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் சார்பாக கடுமையாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக அதிமுக சார்பாக வரும் 25ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தாமல், அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கினோம். தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்ந்தது. ஆனால் தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றாத நிலையில் ஆட்சிக்கு வந்து ஓராண்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துகின்றனர். இதற்கு திமுகவின் நிர்வாகத் திறமையே காரணம் என்று விமர்சித்தார். அதேபோல் பாஜக சார்பாக நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

10 ஆண்டுகளில் மின்சாரத் துறைக்கு ஏற்பட்ட கடன் சுமை ரூ. 1.59 லட்சம் கோடி. அதன் மூலம் தமிழக மின்சார வாரியத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படவில்லை. மாறாக தனியாரிடம் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அதிமுகவின் நிர்வாகத் திறமை தான் காரணம். அதுமட்டுமல்லாமல் அதிமுக ஆட்சியிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதை அவர்கள் மறந்து, மறைத்து பேசுகின்றனர்.

அதேபோல் பாஜகவினர் போராட்டம் நடத்த வேண்டும் என்றால், கர்நாடகா அல்லது குஜராத்தில் தான் போராட்டம் செய்ய வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவாக உள்ளது. எனவே, தமிழக பாஜக பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும். வெறும் ரூ.410க்கு விற்பனையாகிய சிலிண்டர், இப்போது ரூ.1,130க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு காரணம் யார்.

கடந்த 10 ஆண்டுகளில் எவ்வித புதிய மின் உற்பத்தி திட்டங்களும் தமிழக மின்சார வாரியத்தால் தொடங்கப்படவில்லை. தற்போதைய சூழலில் மின்சார வாரியம் முன்னேற்றப் பாதையில் இருக்கிறது. மின் வாரியத்தின் கட்டமைப்பும், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொறுத்தப்பட்டு பின் மாதம் ஒருமுறை மின் கட்டணம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும். திமுக ஆட்சியமைத்து இதுவரை 70 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும்.

சூர்யமின், காற்றாலை ஆகியவற்றில் இருந்து மின் உற்பத்தி செய்யலாம். ஆனால் அனைத்து நேரங்களிலும் அதில் இருந்து மின்சாரம் உற்பத்திசெய்ய முடியும் என்று உத்தரவாதம் இல்லை. அதற்கான மாற்று ஏற்பாடுகள் இல்லை. ஆனால் அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிமுக ஆட்சியில்தான் மின்கட்டணம் அதிகளவில் உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 37 சதவீதம் அளவிற்கு மின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது. தற்போதைய மின் கட்டண உயர்வால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படவில்லை. 2.37 கோடி வீடுகளுக்கான மின் இணைப்புகள் உள்ளன. இதில், குடிசை முதல் குடியிருப்புகள் வரை அடங்கும். 2.37 கோடி வீடுகளில், 1 கோடி இணைப்புகளுக்கான வீடுகளில் உள்ளவர்களுக்கு கட்டண உயர்வால் பாதிப்பில்லை. அதிமுக ஆட்சியில் மின்துறைக்கு வாங்கிய கடனால், தற்போது ரூ.12,000 கோடி வட்டி கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்தார்.