தனி தமிழ்நாடு வேண்டும் என்று சொல்ல திமுகவிற்கு தைரியம் இருக்கிறதா?: வானதி சீனிவாசன்!

இந்தியாவிலிருந்து பிரித்து தனி தமிழ்நாடு வேண்டும் என்று சொல்ல திமுகவிற்கு தைரியம் இருக்கிறதா? என்று, கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆவேசமாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து கோவை மாவட்ட பாஜக சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் வானதி சீனிவாசன் பேசியதாவது:-

திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது விலைவாசி உயர்விற்கு போராடியவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி உயர்வுக்கு காரணமாக மாறிவிட்டனர். மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் பொய்ப்பித்தலாட்டம் என்பது திமுகவினரின் DNA விலேயே உள்ளது. தமிழகத்தில் மின்சாரத்தைப் பொறுத்தவரை தற்பொழுது 100 யூனிட் இலவச திட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து ஏழை எளிய மக்களை ஏமாற்றுவதாகவும் மின்கட்டண உயர்வு சிறுகுறு தொழிற்சாலைகள் கடுமையாக பாதிப்படையும். திமுக அரசு விலையை உயர்த்தி விட்டு மத்திய அரசின் மேல் பழி போடுகின்றனர்.

இந்தியாவிலிருந்து பிரித்து தனி தமிழ்நாடு வேண்டும் என்று சொல்ல திமுகவிற்கு தைரியம் இருக்கிறதா? நான் சவால் விடுகிறேன், தமிழ்நாட்டை பிரிக்க நினைப்பது பிரிவினை தான்? மத்திய அரசின் உதவி இல்லாமல் தாமாக மின்சாரத்தை தயாரித்து கொள்வார்களா? தமிழகத்தில் எந்த பிரச்சனை என்றாலும் முதல் குரலை பாஜக தான் கொடுக்கிறது. மதுபான விலை உயர்வுக்கும் மத்திய அரசு தான் காரணம் என சொல்வார்களா? பாஜகவினர் அந்த கடைகளுக்கு(மதுபான கடை) எல்லாம் போக மாட்டார்கள்.

மதுபானங்களின் விலை ஏற்றத்திற்கு பாஜக காரணம் என சொன்னார்களா? அவர்கள் கூற மாட்டார்கள்? தமிழகத்தில் எதன் விலை ஏறினாலும் மோடி தான் காரணம், பாஜக தான் காரணம். திமுக ஆட்சிக்கு வந்த சுமார் ஆறு மாத காலத்தில் நல்ல ஆபிசர்களை வேலைக்கு போட்டு நல்லாட்சி செய்வதாக காண்பித்தார்கள். ஆனால் தற்பொழுது கமிஷன் வாங்கி வருகின்றனர். மணல் எடுப்பதற்கு அரசு அலுவலர் கையொப்பம் இடுவதற்கு பதிலாக திமுகவினரே கையொப்பமிட்டு மணல் எடுத்து கொண்டு சென்று விடுகின்றனர். இதுவா நேர்மையான ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.