கட்சியின் ஒரேவொரு நாடாளுமன்ற உறுப்பினரை கட்சி சார்பாக செயல்படவிடாமல் தடுப்பதற்கு ஈபிஎஸ் தரப்புக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கியதாக ஈபிஎஸ் கடிதம் எழுதிய நிலையில் சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியின் சார்பில் செயல்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை, கழகத் தொண்டர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதிமுக, எம்ஜிஆர் என்ற மாமனிதரால் தோற்றுவிக்கப்பட்டு, அம்மா என்ற பெண் சிங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த ஒரு பேரியக்கம். ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைப்படும் வகையில் நம் இரு பெரும் தலைவர்களும் இந்த இயக்கத்தை தனித்துவத்தோடு செயல்பட வைத்தார்கள்.
ஜெயலலிதா நம்மையெல்லாம் விட்டுச் சென்ற நாள் முதல் இன்று வரை நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும், ஒரு சில சுயநலவாதிகள் மேற்கொண்ட தவறான முடிவுகளால், இன்றைக்கு அதன் சிறப்பு குறைந்து, தன் பெருமைகளை ஒவ்வொன்றாக இழந்து வருவதாக கழகத் தொண்டர்கள் கண்ணீர் வடிக்கின்றார்கள். அதாவது, கடந்த 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலேயே மிகப்பெரிய ஒரு தோல்வியை இயக்கம் அடைந்தது. இந்த தோல்வி எதனால் அடைந்தோம் என்று சற்று சிந்தித்து பார்த்து இருந்தால், அடுத்து நடைபெற்ற தேர்தல்களிலாவது வென்று இருக்கமுடியும். ஆனால், அதுவும் நடக்க வில்லை. தொடர் தோல்விகளை சந்தித்து கொண்டே இருக்கிறது. இதைப் பற்றி கொஞ்சமும் ஆராய்ந்து பார்க்காமல், தொண்டர்களைப் பற்றி கவலையும்படாமல், தன் சுய தேவைகளை மட்டும் மனதில் வைத்து கொண்டு ஒரு சிலரின் செயல்பாடுகளால் தொடர்ந்து அழிவை நோக்கி, அதிமுக சென்று கொண்டு இருப்பதாக கழகத்தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒரு சிலர் தனது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் எண்ணத்தில் பொய்யான வாக்குறுதிகளையும், நம்பிக்கைகளையும் அனைவரிடத்திலும் விதைத்து, தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டதோடு மட்டுமில்லாமல், தன்னை சுற்றி இருக்கின்ற சொந்த கட்சியினரையும், ஏன் இன்னும் சொல்லப்போனால் தங்களோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த மாற்று கட்சியினரையும் கூட நம்ப வைத்து ஏமாற்றியதுதான் மிச்சம். அதேபோன்று, கட்சியின் நலனைக் காற்றில் பறக்கவிட்டு எடுத்த தவறான முடிவுகளால், நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு, கட்சியின் அங்கீகாரத்தையும் இழந்து நின்றோம்.
இந்த குழ்நிலையில், கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே ஒரு மக்களவை உறுப்பினரை, கட்சியை விட்டே நீக்குவதும், நாடாளுமன்றத்தில் நமது அதிமுகவின் பெயரை சொல்வதற்கு யாருமே வேண்டாம் என்று கண்மூடித்தனமாக முடிவு எடுப்பதையும் கழகத் தொண்டர்கள் ஒரு நியாயமற்ற செயலாகத்தான் பார்ப்பார்களே தவிர, ஒரு அறிவார்ந்த செயலாக யாருமே பார்க்கமாட்டார்கள். கட்சிக்கு நல்லது செய்பவர்களா இவர்கள்? அதாவது, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்பவர்களை, கழகத் தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? தன் சொந்த விருப்பத்திற்காக, நாடாளுமன்றத்தின் மக்களவையில் கட்சியின் அங்கீகாரத்தையே அழிக்க நினைப்பதை தன் உடம்பில் உண்மையான அண்ணா திமுக இரத்தம் ஓடுகின்ற கழகத் தொண்டர்கள் யாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரு மரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுகின்ற வேலையை செய்வது எந்த அளவுக்கு அறிவற்ற செயலோ, அதுபோன்று இவர்களது நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கழகத் தொண்டர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
“சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா, நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா, நீ எண்ணிப்பாரடா” என்ற பாடலில் வரும் வரிகள் தான் தற்போது நம் நினைவுக்கு வருகிறது. அதாவது, ஆளும் வளரணும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி என்ற பாடலிற்கேற்ப நம்மை வளர்த்த நம் இருபெரும் தலைவர்களான புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஆகியோருக்கு மகிழ்ச்சி அளிக்கின்ற வகையில் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் அமைய வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். எனவே, கழகத் தொண்டர்கள் அனைவருக்கும் இன்றைக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான். அதாவது, இயக்கம் அழிந்தாலும் பரவாயில்லை எப்படியாவது பதவிகளை தட்டி பறிக்க வேண்டும் என்று தாண்டி குதிப்பவர்களை எண்ணி யாரும் சிறிதும் கவலைப்படாதீர்கள். இவர்கள் எண்ணம் தவறானது, இயக்கத்திற்கு எதிரானது என்பது வெளிப்படுகின்ற காலம் வந்துவிட்டது. உண்மையான கழகத் தொண்டர்களின் பேராதரவோடு, நம் இயக்கம் சீரோடும் சிறப்போடும் செழிக்க இருக்கிறது. இதை யாராலும் தடுக்கவும் முடியாது. அதேபோன்று, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும். இதை எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் கண்கூடாக பார்க்கத்தான் போகிறீர்கள் என்பதையும் இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.