சின்னசேலம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவியின் உடலுக்கு உறவினர்களும் அரசியல் கட்சித்தலைவர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி உயிரிழந்தார். மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சட்டப்போராட்டம் நடத்திய அவரது பெற்றோர் நீதிபதியின் அறிவுறுத்தலுக்குப் பிறகு உடலை பெற்றுக்கொள்வதாக நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளுமாறும், நாளை மாலைக்குள் இறுதிச்சடங்குகளை முடிக்கும்படியும் நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் ஷவரன் குமார் ஜடாவத், வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் வழியில் சிறிய விபத்தில் சிக்கிய நிலையில், மாணவியின் உடல் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி பகுதியில் வன்முறை சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கவும், போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யவும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனை வளாகத்திலும் 500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாணவியின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டதை அடுத்து ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உடலுக்கு விருதாச்சலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தி அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மாணவி உயிரிழப்பிற்கு அரசு ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கூறினார். உயிரிழந்த மாணவியின் தாயாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மாணவிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஸ்ரீதர் வாண்டையார் கூறினார். உறவினர்களும், சொந்தங்களும் கண்ணீர் மல்க மாணவிக்கு அஞ்சலி செலுத்தினர்.
மாணவியின் உடலுக்கு உள்ளூர் மக்களும் உறவினர்களும் அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
மாணவியின் இறுதிச் சடங்கை செய்து முடிக்க, இடுகாட்டில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து மாணவியின் உடல் இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு மாணவி உடல் மீது பாடப்புத்தகம் ஒன்றும் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மாணவி உடல் அடக்கம் செய்யப்பட்டபோது அமைச்சர் சி.வெ.கணேசன் கண்ணீர் விட்டு அழுதார். மேலும், மாணவியின் ஆன்மா அமைதியாக இளைப்பாற வேண்டி சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துமாறு அமைச்சர் கணேசன் கேட்டுக்கொண்டார். அதன்படி, அங்கிருந்தவர்கள் அனைவரும் மாணவிக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து, அங்கு குவிந்திருந்தவர்களில் ஒருவர், மாணவிக்கு வீரவணக்கம் என முழங்க, அங்கு கூடியிருந்தவர்கள் வீரவணக்கம் என தொடர்ந்து கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து, கண்ணீருடன் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.