காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 பேரை மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்து அவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் செய்த அமளியால் ஒரு வாரமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை முடங்கியது. இந்நிலையில், இன்று பிற்பகலில் மக்களவை தொடங்கியது முதலே பதாகைகளுடன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அவை செயல்பட விடாமல் அவைத் தலைவரின் இருக்கை முன்பு நின்று பதாகைகள் ஏந்தி அமளியில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்படுவதாக ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். இடைநீக்கம் செய்யப்பட்ட 4 எம்.பி.க்களும் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியை தொடர்ந்து மக்களவை தலைவர் ஓம் பிர்லா பேசுகையில், “அவை உறுப்பினர்கள் பதாகைகளுடன் வருவதை நிறுத்த வேண்டும், விவாதத்திற்கு அரசு தயாராக உள்ளது. பதாகைகளுடன் வரும் நபர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க மாட்டார்கள். ஜனநாயகத்தின் கோயில் இது. அவையின் கண்ணியத்தை காப்பது உறுப்பினர்களின் கடமையாகும். விவாதிக்க வேண்டுமெனில் நான் தயாராக இருக்கிறேன். ஆனால், பதாகைகள் மட்டும் காண்பிக்க நினைக்கும் எம்.பி.க்கள், 3 மணிக்கு பிறகு அவைக்கு வெளியே சென்று காட்டுங்கள். நாட்டு மக்கள் அவை இயங்க விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து, பிற்பகல் 3 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.