84வது பிறந்தநாள் காணும் பாமக நிறுவனர் ராமதாஸ்: தலைவர்கள் வாழ்த்து!

இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள கீழ்விசிறி கிராமத்தில் ஜூலை 25, 1939ஆம் ஆண்டில் சஞ்சீவிராயக் கவுண்டர் – நவநீத அம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் ராமதாஸ். பள்ளிப்படிப்பைச் கீழ்விசிறி ஊரிலுள்ள காந்திஜி ஆதாரப் பள்ளியில் பயின்ற இவர், தனது மருத்துவப் படிப்பை சென்னை மருத்துவக் கல்லூரியில் நிறைவு செய்தார். படிப்பு முடிந்ததும், திண்டிவனத்திலுள்ள அரசு மருத்துவமனையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர், ஏழை மக்களுக்குச் சேவை செய்யும்விதத்தில், சொந்தமாக க்ளினிக் ஒன்றைத் தொடங்கி, 2 ரூபாய், 3 ரூபாய் என மிகக்குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்துவந்தார். பின்னர் தான் வன்னியர் சமூகம் பின் தங்கிய நிலையில் இருப்பதை உணர்ந்து பேராசிரியர் தீரன், ஏ.கே.நடராசன் உள்ளிட்ட வன்னியர் சமுதாயத் தலைவர்களுடன் சேர்ந்து `வன்னியர் சங்கம்’ என்ற புதிய அமைப்பை 1980ஆம் ஆண்டு, ஜூலை 20-ம் தேதி தொடங்கினார்.இந்த அமைப்பு பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியாக உருவாகியது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய சக்தியாக பாமக தற்போது வரை திகழ்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூலை 25) தனது 84ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக பாமக தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழகம் மட்டுல்மல்லது தேசிய கட்சிகளின் அரசியல் சுட்சித் தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை பலரும் வாழ்ந்து தெரிவித்து வருகின்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! சமூகநீதிக் களத்தில் மேலும் பல்லாண்டுகள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற விழைகிறேன்” என கூறியுள்ளார்.

தமிழக எதிர்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டுள்ளவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், மருத்துவர் அய்யா.திரு.ராமதாஸ் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பெரியவர் மருத்துவர் அய்யா. ராமதாஸ் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “பாட்டாளி மக்களுக்கு அரணாக இருப்பவர், அன்பு உள்ளம் கொண்ட இளைஞர்களின் வழிகாட்டி மருத்துவர் ஐயா அவர்களின் 84வது பிறந்ததினமான இன்று அவர் நீண்ட ஆயுளுடன் மக்கள் சேவையைத் தொடர பாஜக சார்பாக வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் உரிமைக்கு, அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு அயராது உழைத்து வருபவர், சமரசமின்றி சமூகநீதி கொள்கையில் உறுதியாக நிற்கின்ற தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் போராளி! எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ‘தமிழ்க்குடிதாங்கி’ எங்கள் ஐயா மருத்துவர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! ஐயா அவர்கள் நிறைந்த உடல் நலத்துடனும், உள்ள வலிமையுடனும், தமிழுக்கும், தமிழர்க்கும் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து தொண்டாற்றி, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திட எனது நெஞ்சம் நிறைந்த அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழும், உங்கள் அன்புப்பிள்ளை, சீமான்” என கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் மருத்துவர் ராமதாஸ் தனது பிறந்தநாளை சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள கீழ்விசிறி கிராமத்தில் தொண்டர்களுடன் கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு தனது பிறந்த கிராமத்தில் 84 அடி உயர பாமக கொடியை ஏற்றினார். அவருக்கு கிராம மக்கள் மேளதாளத்துடன் ராட்சத மாலை போட்டு வரவேற்றனர். என்ன தவம் செய்தேன் இம்மண்ணில் பிறக்க என கீழ்விசிறி கிராம மக்களிடம் கண்ணீர் மல்க கவிதை கூறினார். முன்னதாக தனது வீட்டிற்கு சென்று டாக்டர் ராமதாஸின் பெற்றோரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது உணர்ச்சி வசப்பட்டு அவர் கண்ணீர் விட்டு அழுதார்.