லக்கிம்பூர் வன்முறை வழக்கில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்க, அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்து உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் என்ற இடத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த பாஜகவைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது ஏறியது. இந்த காரை ஆஷிஷ் மிஸ்ரா ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில், 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இது வழக்குப் பதிவு செய்த போலீசார், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி, ஆஷிஷ் மிஸ்ரா தரப்பில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் இதே அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கியது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மேல்முறையீடு செய்யவே, உச்ச நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமினை ரத்து செய்து மீண்டும் அலகாபாத் உயர் நீதிமன்றம் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.