ஓபிஎஸ் வீட்டை உடைக்க எங்களுக்கு எவ்வளவு நேரமாகும்: ஆர்.பி.உதயகுமார்!

அதிமுக அலுவலகத்தை சூறையாடியது போல் ஓபிஎஸ் வீட்டை சூறையாட எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு தொடர்பாக நேற்றைய தினம் மாவட்டத் தலைநகரங்களில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. தேனி மாவட்டத்தில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியில் பெரிய அளவில் ஆட்களை திரட்டி நாம் யார் என காண்பிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு விரும்பியது. இதற்கான பொறுப்பை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இன்றைய தினம் தேனி மாவட்டமே குலுங்கும் அளவுக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார் ஆர்.பி. உதயகுமார். திமுக அரசை கண்டித்ததுடன் ஓபிஎஸ் தரப்பையும் ஒரு கை பார்த்தார். அவர் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது:-

தர்மயுத்தம் நடத்திய ஓ பன்னீர் செல்வம் தற்போது துரோக யுத்தம் நடத்தி வருகிறார். தேனி மாவட்டத்திற்குள் நுழைய முடியுமா என சிலர் சவால் விட்டனர். திமுகவின் கைக்கூலியாக மாறி சதித்திட்டம் தீட்டினால் அது பகல் கனவாகத்தான் முடியும். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது எடப்பாடி பழனிச்சாமி 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால் ஓபிஎஸ் போடி தொகுதியை மட்டும் சுற்றி வந்தார். இப்படி சுயநலத்துடன் இருக்கும் இவர்தான் தலைவரா. தேனி மாவட்டத்தின்தான் அதிக பொதுக் குழு உறுப்பினர்கள் உள்ளார்கள். விசுவாசம் மிக்க மாவட்டத்திலிருந்து சில துரோகிகளும் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜெயலலிதா வாழ்ந்த தலைமை கழகத்தை தொண்டர்கள் கோயிலாக பாவிக்கிறார்கள். ஆனால் அந்த கோயிலையே உடைத்ததை எந்த தொண்டர்களும் மன்னிக்க மாட்டார்கள். கோயில் போல இருந்த இடத்தை குண்டர்களை வைத்துச் சூறையாடினீர்கள். உங்கள் வீட்டை உடைக்க எவ்வளவு நேரம் ஆகும்?. இவ்வாறு அவர் பேசினார்.

இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக அறுவிக்கபட்ட பின் தேனி மாவட்டத்தில் நடைபெறும் முதல் கண்டன ஆர்ப்பாட்டம் என்பதால் ஓபிஎஸ்யின் சொந்த மாவட்டம் என்பதாலும், தேனி மட்டுமல்லாது மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர்.