உளவுத்துறையில் உள்ள சாதியவாதிகள் செய்யும் சதி: திருமாவளவன்!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கை வைத்து உளவுத்துறையில் உள்ள சாதிவாதிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக அரசியல் சதி செய்வதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இது ஈசிஆர் இண்டெர்நேஷனல் பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இந்த மாணவி கடந்த 13 ஆம் தேதி இரவு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்து வந்தனர். இதற்கு நியாயம் கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பெரும் போராட்டமாக இது உருவெடுத்த நிலையில் ஒரு கும்பல் பள்ளியின் 10க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கும், பள்ளி கட்டிடத்துக்கும் தீ வைத்தது. போராட்டக்கார்கள் கற்களை வீசி தாக்கியதில் போலீசாரும் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக பலரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதை வாங்க பெற்றோர் மறுத்து வந்தனர். இந்த நிலையில் பல்வேறு கட்ட இழுபறிக்கு பிறகு நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று சம்மதித்தனர். அதன் பின்னர் 23 ம் தேதி கடலூரில் மாணவியின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

இந்த நிலையில் ஆங்கில நாளேடு ஒன்றில் மாணவி மரணத்தின் பின்னணியில் ஆதி திராவிடர்கள் இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதில், “மாணவி கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது யார்? என்று விவாதத்தை மடைமாற்றிவிட்டு மாணவியின் குடும்பத்திற்கு எதிராகச் சிலர் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர். அந்தச் சதிக்கும்பலுக்குத் துணைபோகும் வகையில் தற்போது உளவுத்துறையின் நடவடிக்கைகளும் அமைவதாக உள்ளது. இது தொடர்பான ஆங்கில நாளேட்டுச் செய்தி உள்நோக்கத்துடன் கூடியதாக உள்ளது. உளவுத் துறையிலுள்ள சாதிய வாதிகளின் சதியாகவே இது தெரிகிறது. இம்மாதிரியான தகவலை ஊடகத்திற்கு அளித்த உளவுத்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.