அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா இரண்டாவது முறையாக இன்று மீண்டும் ஆஜர் ஆனார். இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த தலைவர்கள் உட்பட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள ‘யங் இந்தியா’ என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்துள்ளதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை கடந்தாண்டு இறுதியில் வழக்குப்பதிவு செய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி, சோனியா மற்றும் ராகுலுக்கு, அமலாக்கத் துறை ‘சம்மன்’ அனுப்பியிருந்தது. இதன்படி கடந்த மாதம் ஆஜரான ராகுலிடம், ஐந்து நாட்களில் 50 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, கொரோனா தொற்று ஏற்பட்டதால், விசாரணைக்கு ஆஜராக சோனியா அவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது. புதிய சம்மனை ஏற்று, அவர் கடந்த 21ம் தேதி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவருடன் மகளும் பொதுச் செயலருமான பிரியங்கா உடன் சென்றார். அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகினர்.
இதனிடையே, சோனியா மீண்டும் ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதன்படி இன்று(ஜூலை 26) மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா ஆஜரானார். அவருடன் மகள் பிரியங்கா உடன் சென்றார். சோனியாவிற்கு அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். பார்லிமென்ட் வளாகத்தில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் தலைமையில் எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலையின் முன்பு தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களவை நடத்தவிடாமல் அவைத் தலைவரின் இருக்கை முன்பு நின்று பதாகைகள் ஏந்தி தொடர் அமளியில் ஈடுபட்ட காரணத்திற்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா நேற்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு அமர்ந்து இன்று காலை முதல் 4 பேரும் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவின் நகலை கிழித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களவை உறுப்பினர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்களும் போராட்த்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.