பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை விரட்டி அடித்த துணிச்சல் மிக்க கார்கில் போர் 23 வது ஆண்டு நினைவு நாளான இன்று காஷ்மீர் எல்லை மற்றும் டெல்லியில் உள்ள நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்தப்பட்டது.
கார்கில் ஸ்ரீநகரில் இருந்து 210 கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு குளிர் காலத்தில் வெப்பநிலை மைனசுக்கும் கீழ் (-48 டிகிரி செல்சியஸ்) இறங்கிவிடும். இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும், ஒப்பந்தத்தின் அடிப்படையில், செப். 15 முதல் ஏப். 15 வரை கார்கில் மலைச் சிகரங்களில் இருந்து திரும்பி விடுவர். ஏப்ரலின் பிற்பாதியில் வழக்கமான நிலைகளில் பாதுகாப்பு பணிகளை தொடர்வது வழக்கம்.
கடந்த 1999 ஏப்ரலில் கார்கிலில் மீண்டும் பாதுகாப்பு பணியை தொடர சென்ற இந்திய ராணுவத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாக்., ராணுவம், பயங்கரவாதிகளுடன் கை கோர்த்துக்கொண்டு இந்திய பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எல்லை தாண்டி இந்திய நிலைகளுக்குள் ஊடுருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது திடீரென நடந்தது அல்ல, பாகிஸ்தானில் திட்டமிடப்பட்ட ‘ஆப்பரேஷன் பாதர்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட அத்துமீறல் என்பதை இந்தியா உணர்ந்தது.
பாக்., சதியை முறியடிக்க ‘ஆப்பரேஷன் விஜய்’ என்ற பெயரில் இந்தியா 1999 மே 26ம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. வான்வழித் தாக்குதல் மூலம் இந்திய ராணுவம், தனது நிலைகளை ஒவ்வொன்றாக கைப்பற்ற ஆரம்பித்தது. தோல்வி உறுதியென தெரிந்த பின், ஆதரவு தேடி அமெரிக்காவுக்கு ஓடினார் அப்போதைய பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப். அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் பாகிஸ்தானின் போக்கை விமர்சிக்க, வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் பின்வாங்க உடன்பட்டது. ஜூலை 26ல் இந்தியா, கார்கில் மலையில் வெற்றிக்கொடி நாட்டியது.
கார்கில் மாவட்டம் திராஸ், கச்சார், படாலிக் , துர்துக், ஆகிய பகுதிகளில் கடும் போர் நடந்தது. இதில் பாகிஸ்தான் படையினரை விரட்டி வெற்றி வாகை சூடிய நாள் இன்று (ஜூலை26) கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு காஷ்மீர் பகுதியில் உள்ள நினைவு ஸ்தூபியில் வீரர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தலைமை தளபதி வி.ஆர். சௌத்ரி மற்றும் கடற்படை தளபதி ஹரி குமார் ஆகிய மூன்று படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.