பால் தாக்கரே படத்தை ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்த கூடாது: உத்தவ் தாக்கரே!

பால் தாக்கரேவின் படத்தை பயன்படுத்தி ஓட்டுக் கேட்பதை ஏக்நாத் ஷிண்டே நிறுத்த வேண்டும் என, உத்தவ் தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு, போர்க்கொடி தூக்கினார். இதனால் அதிருப்தி அடைந்த உத்தவ் தாக்கரே, பெரும்பான்மை இல்லாததை உணர்ந்து, முதலமைச்சர் மற்றும் எம்எல்சி பதவியை, ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து, சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்துள்ளார்.
இதற்கிடையே, சிவசேனா கட்சி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளனர். இரு தரப்பினரும் உரிய ஆவணங்களை வரும் 1 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

எனது ஆட்சி போய் விட்டது. முதல்வர் பதவி போய் விட்டது. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் எனது சொந்த மக்களே துரோகிகளாக மாறி விட்டனர். நான் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரும்போது எனது அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டி உள்ளனர். எனக்கு துரோகம் செய்து விட்டார்கள். கட்சியை பிளவுபடுத்துகிறார்கள். சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேவின் படத்தை பயன்படுத்தி ஓட்டுக் கேட்பதை ஏக்நாத் ஷிண்டே நிறுத்த வேண்டும். நான் ஒருவரை (ஏக்நாத் ஷிண்டே) நம்பி கட்சியை ஒப்படைத்தேன். அவரை நம்பர் 2 இடத்தில் வைத்திருந்தேன். கட்சியை கவனித்துக் கொள்வார் என நம்பினேன். ஆனால் அந்த நம்பிக்கையை அவர் (ஏக்நாத் ஷிண்டே) உடைத்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.