முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் அமைச்சர் ஐ.பெரியசாமி விசாரணைக்காக ஆஜரான நிலையில், அவரிடம் 4 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டனர்.
1986ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ஜ் அதிகாரியான ஜாபர் சேட் 1990ஆம் ஆண்டு சென்னை கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக காவல்துறையில் தமிழகத்தின் முதன் முறையாக பணியில் சேர்ந்தவர். பின்னர் பல இடங்களில் பணியாற்றியுள்ளார். பின்னர் சிபிசிஐடி டிஜிபியாக பொறுப்பேற்ற ஜாபர் சேட் பல முக்கிய வழக்குகளை கையாண்டுள்ளார். ஜாபர் சேட் ஐபிஎஸ் குறிப்பாக நீட் தேர்வு முறைகேடு வழக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சமூக ஆர்வலர் என கூறப்படும் முகிலன் மாயமான வழக்கு, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு உள்ளிட்ட உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் விசாரண நடத்தியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை டிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்ட அவர், கடந்த 2020ஆம் ஆண்டு காவல்துறை பணியில் ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐஜியாக இருந்த போது, அந்த பதவியிலிருந்தபடியே உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை பெற்று பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்து சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. 2007 மற்றும் 2008ஆம் ஆண்டு காலகட்டத்தில் வீட்டு வசதி வாரியத்தில் ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அப்போது திமுக சார்பில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் திண்டுக்கல் ஐ.பெரியசாமி இருந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியிடம் ஜாபர் சேட்டிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், இன்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் விசாரணை நடத்தினர். இதற்காக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆயிரம் விளக்கில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். 1 மணிக்கு விசாரணைக்காக வந்த அமைச்சர் ஐ.பெரியசாமி மாலை சுமார் 4 வாக்கில் விசாரணை முடிந்து புறப்பட்டுச் சென்றார்.