கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 5 பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல்!

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 5 பேரையும் ஒரு நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்,சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த கடலூர் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் ஜூலை13ம் தேதி பள்ளியில் இறந்து கிடந்தார். இது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்து வரும் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கீர்த்திகா ஆகிய 5 பேரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்பு சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி கோமதி தலைமையிலான போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கு இன்று(ஜூலை 27) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி புஷ்பராணி, கைது செய்யப்பட்டவர்களை ஒரு நாள் காவலில் வைத்து விசாரித்து, நாளை பிற்பகல் 12.30க்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிபிசிஐடி.,க்கு உத்தரவிட்டார்.

மாநில அளவில் இந்த கலவரம் பேசப்பட்ட நிலையில் தாமாக முன்வந்து தேசிய மாநில குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் இன்று (27-ந் தேதி) நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாநில தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தின் தலைவர் பிரியங்கானுங்கோ தலைமையில் 7 பேர் குழு இன்று காலை 11:30 மணியளவில் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். ஸ்ரீமதி மாணவி 3-வது மாடியில் இருந்த தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்பட்ட கீழ்தளத்திலும் பிறகு மூன்றாவது மாடி மற்றும் மாணவி தங்கி இருந்த விடுதி மொட்டை மாடி ஆகிய இடங்களில் பார்வையிட்டனர்.

முதற்கட்டமாக 7 பேர் கொண்ட குழு, கடலூர் மாவட்டம் வேப்பூர் பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள உயிரிழந்த மாணவியின் பெற்றோரை சந்தித்து ஒரு மணி நேரம் விசாரணை செய்தது. இதனையடுத்து மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது மாணவி தங்கியிருந்த விடுதி, அவர் படித்த வகுப்பு, அவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படும் இடம், மாணவி தரை தளத்தில் விழுந்ததாக கூறப்படும் இடங்களை பார்வையிட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பள்ளியில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர், இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்து விசாரணை செய்து வந்த அதிகாரிகள், பணியிடை மாற்றம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார், காவல் துறையினர், மாணவியை உடற் கூராய்வு செய்த மருத்துவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங் கானூங்கோ கூறியதாவது:-

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இணைந்து உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு சென்று முதலில் விசாரணை செய்தோம். இதையடுத்து மாணவி உயிரிழந்த பள்ளிக்கு சென்று அவர் தங்கியிருந்த விடுதி மற்றும் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டோம். அதுமட்டுமின்றி இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து விசாரணை செய்துள்ளோம். இதில் மாணவிக்கு உடற் கூராய்வு செய்த மருத்துவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டோம்.

மேலும் நாங்கள் கவனித்தது வரை ஆரம்பக்கட்ட விசாரணையில் சில குறைபாடுகள் இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி பள்ளி நிர்வாகம் அனுமதியின்றி விடுதி இயக்கியது தெரியவந்துள்ளது. பள்ளி நிர்வாகமும் மாணவி மரணத்தில் அலட்சியமாக இருந்துள்ளனர். மேலும் மாணவர்களுடைய அடிப்படை வசதிகள் குறித்து சரியாக ஆய்வு செய்யாமல் பள்ளி நிர்வாகம் இருந்துள்ளனர். நாங்கள் விசாரணை செய்த அனைத்தையும் அறிக்கையாக மத்திய மற்றும் மாநில அரசிடம் சமர்ப்பிக்க இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.