தமிழக பதிவுத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, அதன் தினசரி நிர்வாகத்தில் அமைச்சர் மூர்த்தியின் அதீத தலையீடு உள்ளதாக பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் சிறிய அளவில் நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் தான் அதிகம். குடும்பத்தில், திருமணம், கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்காக பெரிய செலவுகள் வரும்போது, விவசாய நிலங்களின் ஒரு பகுதியை விற்றே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் 20 முதல் 50 சென்ட் வரையிலான விவசாய நிலங்களை, சட்டப்படி பதிவு செய்வதற்கு விதிமுறைகள் உள்ளன. ஆனாலும், பதிவு செய்ய முடியாமல் விவசாயிகளும், பொதுமக்களும் தவித்து வருகிறார்கள். பதிவுத்துறை அமைச்சரிலிருந்து, அத்துறையில் இருப்பவர்களின், சட்ட விதிகளுக்கு எதிரான, வரம்பு மீறிய தலையீடுகளே இதற்கு காரணம் என புகார்கள் வருகின்றன.
தமிழக பதிவுத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, அதன் தினசரி நிர்வாகத்தில் அமைச்சர் மூர்த்தியின் அதீத தலையீடு உள்ளதாக புகார்கள் குவிகின்றன. இது பதிவுத்துறை பணியாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள் உள்பட அனைவரையும் பாதித்து வருகிறது. தனது கவனத்திற்கு கொண்டு வராமல் 20 செண்ட்டுக்கு மேலான நிலப் பதிவை செய்யக் கூடாது என, அமைச்சரே வாய்மொழி உத்தரவிட்டு இருப்பதாக பதிவுத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
2018 மற்றும் 2020 வரையிலான பதிவுத்துறையின் பல சுற்றறிக்கைகளில், விவசாயிகள் சிறு விவசாய நிலங்களை விற்க வழிவகை உள்ளது. அதன்படி, பதிவுகள் மேற்கொள்பவர்களை அமைச்சர் சஸ்பெண்ட் செய்துள்ளார். இதனால் பல ஆவணங்கள், பதிவு முடியாமல் நிலுவையில் உள்ளன. அமைச்சரைப் பார்த்த பிறகே வேலையை முடிக்க முடிவதாக புகார்கள் வருகின்றன.
தமிழக பதிவுத்துறையில் பணிபுரியும் சார் பதிவாளர்களும், ஊழியர்களும் மிகுந்த அழுத்தத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதுவரை சுமார் 75 சார்பதிவாளர்கள், பணியாளர்களை அமைச்சர் மூர்த்தி தற்காலிக பணி நீக்கம் செய்திருக்கிறார். இந்த விவரங்கள் சார் பதிவு அலுவலகங்களிலும், ஆவண எழுத்தர்களிடமும் விசாரித்தாலே தெரிகிறது. பதிவுத்துறை பணியாளர்கள் இது குறித்துப் பேசவே அஞ்சுகிறார்கள்.
சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறி வரும், முதலமைச்சரின் கவனத்திற்கு உட்பட்டே இது நடக்கிறதா? அல்லது பதிவுத்துறை அமைச்சர் மட்டுமே இதை செய்து வருகிறாரா? என்பதற்கு முதலமைச்சர் தான் பதிலளிக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதில் தலையிட்டு, சிறு விவசாயிகளின் பகுதி நிலங்களை, விதிகளின்படி, கால தாமதமின்றி, பத்திரப்பதிவு செய்ய, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.