கனியாமூர் கலவரத்தில் பள்ளிக் கட்டடத்தை இடித்தவர் கைது!

கனியாமூர் கலவரத்தில் பள்ளியின் கட்டடத்தை இடித்த மணிஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தது தொடா்பாக கடந்த 17ஆம் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக 302 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை விடியோ ஆதாரங்களை வைத்து கைது செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், கலவரத்தின் போது பள்ளியில் கட்டடத்தை இடித்த மணிஷ் என்பவரை இன்று கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, பள்ளி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காவல் துறை வாகனத்திற்கு தீ வைத்ததாக நிதீஷ் வசந்த் என்பவரை நேற்று இரவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் மற்றும் குழுக்கள் அடிப்படையில் இந்த கைதுகளை போலீசார் செய்து வருகின்றனர். அதேபோல் சிசிடிவி காட்சிகள், போராட்டம் நடத்த இடத்தில் மீடியா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ ஆகியவற்றை வைத்தும் போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை எஸ்ஐடி போலீசார் நேற்று இரவு கைது செய்து உள்ளனர். போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த நபரை எஸ்ஐடி தேடி வந்தது. கருப்பு சட்டை, நீல பேண்ட் அணிந்து போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த ஒரு இளைஞரை போலீசார் தேடி வந்தனர். போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த, வெள்ளை சட்டை அணிந்த மணிகண்டன் என்ற இளைஞர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கருப்பு சட்டை அணிந்த முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட கலவரக்காரர்கள் போனை போலீசார் இதற்காக தீவிரமாக சோதனை செய்தனர். கருப்பு சட்டை அணிந்து இருந்த அந்த நபரின் போன் எண் கலவரம் செய்த இளைஞர் ஒருவரின் போனில் இருந்துள்ளது. இருவரும் நண்பர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த வீடியோவை அந்த நபர் வாட்ஸ் ஆப்பில் ஸ்டோரியாக வைத்து இருந்ததும் அவரின் நண்பரின் வாட்ஸ் ஆப் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை வைத்து போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தது நிதிஷ் என்ற இளைஞர்தான் என்று கண்டுபிடித்தனர். இதையடுத்து நேற்று இரவு நிதிஷை கைது செய்தனர்.

நிதிஷ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். போராட்டத்தில் போலீஸ் வாகனம் உட்பட பல வாகனங்களுக்கு தீ வைத்துள்ளார். நேற்று கைது செய்யப்பட்ட இவர் தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தது ஏன்? இவருக்கு பின் இருந்தது யார்? என்று போலீசார் துருவி துருவி கேள்வி எழுப்பி வருகின்றனர்.