ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானங்கள் அண்மைக் காலமாக தொடா் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு உள்ளாகி வந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டது.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு வரும் அக்டோபா் 29-ஆம் தேதியுடன் நிறைவடையும் கோடைக்கால விமானப் போக்குவரத்து காலத்தில் 4,192 விமான சேவைகளை இயக்குவதற்கு டிஜிசிஏ கடந்த மாா்ச் 11-ஆம் தேதி அனுமதி அளித்திருந்தது. இந்தச் சூழலில் இந்த நிறுவன விமானங்கள் அண்மைக் காலமாக தொடா் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்து வந்தது. குறிப்பாக, ஜூன் 19 முதல் ஜூலை 5 வரையிலான காலகட்டத்தில் இந்த நிறுவன விமானங்கள் எட்டு முறை நடுவானில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகி பாதி வழியில் அவசரமாகத் தரையிறக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது.
கடந்த ஜூன் 19-ஆம் தேதி ஜபல்பூா் நோக்கி புறப்பட்ட இந்த நிறுவன விமானம், விமானத்துக்குள் காற்றழுத்த பிரச்னை காரணமாக மீண்டும் டெல்லிக்கு திரும்பியது. அதே நாளில், 185 பயணிகளுடன் புணேயிலிருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட இந்த நிறுவனத்தின் விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புறப்பட்ட ஒருசில நிமிடங்களில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
ஜூன் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் இந்த நிறுவனத்தின் இரு விமானங்களில் கதவுகள் சரியாக மூடாமல் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டது. ஜூலை 2-ஆம் தேதி, ஜபல்பூா் நோக்கி புறப்பட்ட இந்த நிறுவன விமானத்தில் புகை வந்ததால் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது. ஜூலை 5-ஆம் தேதி சினாவின் சாங்கிங் நோக்கி புறப்பட்ட இந்த நிறுவன விமானத்தில் ரேடாா் சரிவர செயல்படாததால், மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பிவிடப்பட்டது. அதே நாளில், இந்த விமானத்தின் மேலும் இரண்டு விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகி புறப்பட்ட இடத்துக்கே திருப்பிவிடப்பட்டன.
இந்தத் தொடா் சம்பவங்களைத் தொடா்ந்து, விளக்கம் கேட்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு டிஜிசிஏ நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த நோட்டீஸுக்கு நிறுவனம் அளித்த பதில் மற்றும் கோளாறுகளை சரிசெய்ய மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், 50 சதவீத விமானங்களை இயக்க அந்த நிறுவனத்துக்கு டிஜிசிஏ அனுமதி அளித்துள்ளது.
“நேரடி ஆய்வு, நோட்டீஸுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அளித்த பதில் ஆகியவற்றின் அடிப்படையில் 2022 கோடைக்கால போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்ட அளவில் 50 சதவீத விமானங்களை மட்டும் 8 வார காலத்துக்கு இயக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிசிஏ-வின் விரிவான கண்காணிப்பின் கீழ் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த அளவுக்கு மேல் கூடுதல் எண்ணிக்கையில் விமானங்களை இயக்க அந்த நிறுவனம் விரும்பினால், போதிய தொழில்நுட்ப ஆதரவு மற்றும் பாதுகாப்பான இயக்கத்துக்கான நிதி வள ஆதாரம் ஆகியவற்றைக் காண்பிக்க வேண்டும்” என்று தனது உத்தரவில் டிஜிசிஏ தெரிவித்துள்ளது. இந்த உத்தரவின்படி அடுத்த 8 வாரத்துக்கு 2,096 விமான சேவைகளை மட்டுமே ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இயக்க முடியும்.