இலங்கையில் அமலில் உள்ள அவசரநிலை சட்டம் வருகிற ஆகஸ்ட் -14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டதும் அவரும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுச் சொத்துகள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், சேவை விநியோகம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இலங்கையில் மீண்டும் அவசர நிலையை ரணில் விக்ரமசிங்க கடந்த ஜூலை 19 ஆம் தேதி அறிவித்தாா். அதன்பின், நடந்த முடிந்த அதிபர் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க முதல்முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன் ரணில் பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமலில் உள்ள அவசரநிலை சட்டம் வருகிற ஆகஸ்ட் -14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அதிபராக பாராளுமன்றம் மூலம் ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றார். அவருக்கும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரணில் விக்ரமசிங்கே அதிபராக பதவியேற்ற மறுநாளே அதிபர் மாளிகை முன்பு இருந்த போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்கள் தங்கி இருந்த கூடாரங்களை போலீசார் அகற்றினர். போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் அமைதியான போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நாட்டின் சட்டத்தின்படி அனைவருக்கும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதி உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும் அதே உரிமை உண்டு. நாட்டின் அமைப்பை மாற்ற வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் கோரிக்கையாக உள்ளது. அதனை நானும் ஏற்றுக்கொள்கிறேன். நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் வேளையில் அதிபராக பதவியேற்றுள்ளேன். பொருளாதார சவால்களை முறியடித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பல நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.