செஸ் ஒலிம்பியாட்: பிரதமர் படம் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்: நீதிமன்றம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்ரபத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் இடம்பெற வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்தில் பிரதமர் பெயர் இடம்பெறாத விவகாரம் தொடர்பாக ராஜேஷ் கண்ணா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் பெயர், படத்தை சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற கிளையில் இன்று மதியம் நடைபெற்றது. அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் நடத்த முடிவெடுத்தது பெருமைமிக்கது. ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் சூழலில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும். குடியரசுத் தலைவர், பிரதமரின் கீழ் நாடு நிர்வகிக்கப்படும் நிலையில் சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டும். குடியரசுத் தலைவர், பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றாலும் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாமே என்று உயர்நீதிமன்ற கிளை தெரிவித்தது. மேலும், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் படத்தை சேர்க்க கோரிய வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தலைமை நீதிபதி அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்ரபத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் இடம்பெற வேண்டும். குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் இடம்பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி பட விளம்பரம் சேதப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி அழியாத முத்திரையை பெற்றுத்தர வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற கிளையின் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.