பிரதமர் மோடிக்கு செஸ் போர்டை நினைவுப் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

பிரதமர் மோடிக்கு செஸ் போர்டை நினைவுப் பரிசாக வழங்கி முதல்வர் ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்.

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகம் வருகை தந்திருந்தார். தொடர்ந்து சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி முறைப்படி தொடங்கி வைத்தார். இதன்பின்னர் கார் மூலம் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர் இரவு அங்கு தங்கினார். இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.

பட்டமளிப்பு நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, சென்னை விமான நிலையம் சென்ற பிரதமர், அங்கிருந்து அகமதாபாத் புறபட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர். அப்போது பிரதமர் மோடிக்கு செஸ் போர்டை நினைவுப் பரிசாக வழங்கி முதல்வர் ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்.

இதுகுறித்து முதல்வரின் அதிகாரபூர்வ டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

சென்னையில் நடைபெற்ற 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் அகமதாபாத் செல்லும் பிரதமர் மோடியை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் நினைவுப் பரிசாக சதுரங்கப் பலகையை வழங்கி வழியனுப்பி வைத்தார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.