காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?: டிடிவி

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், காவிரி டெல்டா பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, 2020ம்ஆண்டு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் புதிதாக ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பெரியகுடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. மூடப்பட்டுள்ள கிணறுகளை திறப்பதற்கும், எரிவாயு எடுப்பதற்கும் மறைமுக முயற்சிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்ததாக வெளியான தகவல் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திருவாருர் அருகே காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காவிரி டெல்டாவின் திருவாரூர் சேந்தமங்கலம் பெரியகுடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திமுக அரசு அனுமதி அளித்திருப்பதாக வரும் செய்திகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். எடப்பாடி போல அப்பகுதியில் விவசாயத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக்கூடாது. அப்படி அனுமதிக்கப்பட்டால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதற்கு எந்தவித அர்த்தமும் இல்லாமல் போய்விடும். இதிலும் எடப்பாடி பழனிசாமி அரசைப் போலவே ஸ்டாலின் அரசும் தமிழகத்தை வஞ்சிக்க நினைக்கக் கூடாது” என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.