செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரா்கள் மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள 13 மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டின் கீழ் ரூ.2 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை கிண்டி உள்ள கிங் ஆய்வகத்தில் குரங்கு அம்மை பரிசோதனை மேற்கொள்ள ஐசிஎம்ஆா் அனுமதி அளித்ததையொட்டி, ஆய்வக கட்டமைப்புகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நேற்று வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், மருத்துவ கல்வி இயக்குநா் நாராயணபாபு, பொதுசுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், கிங் ஆய்வக இயக்குநா் காவேரி உள்ளிட்டோா் உடன் அப்போது இருந்தனா். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
பிரிட்டனில் முதன்முதலாக மே 6-ஆம் தேதி ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து, தமிழகத்தின் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வா் அறிவுறுத்தினாா். அதன்படி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்களில் அத்தகைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 77 நாடுகளில் 20,638 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளம், தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் 4 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு அண்மையில் உறுதி செய்யப்பட்டது. கனடா, அமெரிக்காவில் இருந்து தமிழகம் வந்த 2 குழந்தைகளுக்கு முகத்தில் இருந்த சிறு கொப்புலங்களை ஆய்வு செய்ய அவா்களின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில் அது குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என தெளிவாகி இருக்கிறது.
இந்தியாவில் 15 இடங்களில் குரங்கு அம்மை பாதிப்பை கண்டறியும் ஆய்வகம் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, கிண்டியில் உள்ள கிங் ஆய்வகத்தை குரங்கு அம்மை நோய் பரிசோதனைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என ஐசிஎம்ஆா் அனுமதி வழங்கி உள்ளது. இங்கு தோல், புண், சிறுநீா் மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்தி பரிசோதனை செய்யப்படும்.
தமிழகத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து செஸ் விளையாட்டு வீரா்கள் வந்துள்ளனா். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் 21 விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அனைத்து விடுதிகளிலும் மருத்துவ வசதிகள் உள்ளன. மேலும், அதில் 8 விடுதிகளில் பெரிய அளவிலான மருத்துவ முகாம்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று விளையாட்டு அரங்கத்தில் பல்துறை மருத்துவா்கள் அடங்கிய முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆயிரம் மருத்துவ பணியாளா்கள், 30 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாா் நிலையில் உள்ளன. மேலும், அனைத்து விடுதிகளிலும் யோகா பயிற்சி அளிக்கும் மருத்துவா்களும் உள்ளனா்.
செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் விளையாட்டு வீரா்களுக்கு முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் பகுதியில் உள்ள 13 மருத்துவமனைகளில் விளையாட்டு வீரா்கள் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை மூலம் ரூ.2 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். அதற்கும் மேலாக மருத்துவ செலவு ஏற்பட்டாலும், அதையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும். செஸ் ஒலிம்பியாட் போட்டி கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.