திருவள்ளூர் அருகே தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையாளர் பிரியங்க் கானூங்கோ தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி ஊராட்சியில் அரசு உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. திருத்தணியை அடுத்த தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூஷணம்-முருக்கம்மாள் தம்பதியின் மகள் சரளா (17), விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி விடுதி அறையில் சரளா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மப்பேடு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், காவல் துறை தலைவர் உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 2 நாள்களாக பள்ளி விடுதியில் சிபிசிஐடி துணைக்காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் மற்றும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் பிரியங்க் கானூங்கோ தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர், நேற்று வியாழக்கிழமை பள்ளி விடுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளி வளாகத்தில் செயல்படும் விடுதியில் தூக்கிட்டு உயிரிழந்த அறை, விடுதி காப்பாளர், தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் மற்றும் உடன் பயின்ற மாணவிகளிடமும் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்தனர். எனவே பள்ளியில் விசாரணை முடிந்த பின்பு, மாணவியின் பெற்றோர் பூஷணம்-முருகம்மாள், சகோதரர் சரவணன், அண்ணி ஆகியோரை ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை செய்யப்போவதாக தெரிவித்தனர். அப்போது, ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சீபாஸ் கல்யாண், சார் ஆட்சியர் மகாபாரதி, வட்டாட்சியர் செந்தில்குமார், துணைக்காவல் கண்காணிப்பாளர் சந்திதாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.