இளைஞர்களின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்: பிரதமர் மோடி

டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னிலையில் உள்ளது. இந்திய இளைஞர்களை வரவேற்க உலக அளவில் நிறுவனங்கள் தயாராக உள்ளன என்று, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

அனைவருக்கும் வணக்கம். பட்டம் பெறும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டை கட்டமைப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள். நாளைய தலைவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மாணவர்களின் சாதனையை கொண்டாட இங்கு கூடியுள்ளோம். இளைஞர்களே எனது நம்பிக்கை என்று சுவாமி விவேகானந்தர் கூறியது இன்றும் பொருந்தும். 125 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு வந்துள்ளார். இந்திய இளைஞர்கள் மீது உலகமே நம்பிக்கை வைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். அவரது சிந்தனைகள் இளைஞர்களுக்கு ஊக்கமூட்டுகிறது. அவர் தங்கி இருந்த அறை நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நூற்றாண்டுக்கு ஒரு முறை வரும் சோதனையாக அமைந்தது. மருத்துவர்கள், விஞ்ஞானிகள் உள்பட அனைவரின் முயற்சியால் நாம் கொரோனாவில் இருந்து மீண்டோம். அவர்கள் அனைவருக்கும் நன்றி. கடந்த ஆண்டில் இந்தியா உலகின் 2-வது பெரிய செல்போன் தயாரிப்பாளராக இருந்தது. வாகன ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 83 பில்லியன் டாலராக அதிகரித்தது. பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. தடைகளை வாய்ப்புகளாக மாற்றுகிறது. உணவுப்பொருள் ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. தொழில்நுட்ப பயன்பாடு பரவலாக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள், இல்லத்தரசிகள், சிறு வணிகர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் கூட தொழில்நுட்பங்களை எளிதாக பயன்படுத்தி வருகிறார்கள். டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னிலையில் உள்ளது. இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாற முன்வர வேண்டும். புதிய மாற்றங்களுக்கு நம்மை உட்படுத்திக்கொள்ள வேண்டும். கட்டுப்பாடுகளை விதிப்பது வலிமையான அரசு அல்ல. முந்தைய அரசு அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. எங்கள் அரசு அதை மாற்றியது. புதிய கல்விக்கொள்கை, மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவெடுக்கும் சுதந்திரத்தை இளைஞர்களுக்கு தருகிறது. கட்டமைப்பு துறையில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. உள்கட்டமைப்பை மேம்படுத்த துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கற்றுக்கொள்ளும்போது இந்தியாவும் கற்றுக்கொள்கிறது. இளைஞர்களின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும். கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் 15 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

உக்ரைன் போரால் உலகம் நெருக்கடியை சந்தித்தபோது இந்தியா உணவு தானிய உற்பத்தியை அதிகரித்தது. இந்திய இளைஞர்களை வரவேற்க உலக அளவில் நிறுவனங்கள் தயாராக உள்ளன. முந்தைய காலங்களில் இளைஞர்கள் ஒரே இடத்தில் பணிபுரிந்து மாத சம்பளம் பெறுவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். ஆனால் இன்று தொழில்முனைவோர்களாக மாறுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இளைஞர்கள் துணிந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கார்ப்பரேட் வரி குறைப்பு உள்ளிட்ட வரி சீர்திருத்தங்களால் தொழில் துறையில் ஏராளமான முதலீடுகள் குவிந்துள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.