கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் அந்தப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் தமிழகத்தில் எந்த பள்ளியிலும் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஏற்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் ஆய்வு செய்த பிறகு அந்த பள்ளிக்கு தேவையான கட்டுமான பணிகளை உடனடியாக துவக்குமாறு அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவுகளை பிறப்பித்தார். அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-
மலைவாழ் மக்களை கல்வியில் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் ஏற்காடு மலைப்பகுதிகளில் இடியும் தருவாயில் உள்ள பள்ளியை உடனடியாக இடித்து புதிய பள்ளி கட்டிடங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 10 ஆயிரத்து 31 பள்ளிகளில் மோசமாக உள்ள கட்டிங்களை இடித்து புதிய கட்டிடங்களை கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உடனடி நடவடிக்கையாக ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு அருகே உள்ள கல்லூரியில் நேரடி வகுப்பு நடத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பள்ளியில் பயின்ற மாணவ மாணவியர்கள் தமிழகத்தில் எந்த பகுதியில் உள்ள பள்ளிகளிலும் சேர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பெற்றோரிடம் பேசி விண்ணங்களும் பெறப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை விரைவில் தொடங்குவோம்.
இந்த சூழலில் பெற்றோர்கள் மற்ற குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று தான் அதிகமாக வேண்டுகோள் விடுத்து வருகிறோம். ஏனென்றால், கொரோனாவுக்கு பின் நேரடியாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கக் கூடாது. மாணவர்கள் விளையாடுவதற்கும், சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என்று பெற்றோர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். பள்ளி மாணவ மாணவிகள் விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதற்காகவே தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக ஒட்டுமொத்தமாக பெற்றோர், ஆசிரியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதேபோல் தனியார் பள்ளிகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பள்ளிகள் வைக்கக் கூடாது. அதேபோல் சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் காலை சிற்றுண்டி குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டம் துவங்குவது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் பணம் வசூலிப்பது தெரிய வந்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குவது அரசின் எண்ணமாக இருந்து வருகிறது. மடிக்கணினியை உற்பத்தி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதன் காரணமாக மடிக்கணினி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.