காங்கிரஸ் தலைவா்கள் மீது அமைச்சா் ஸ்மிருதி இரானி அவதூறு வழக்கு!

தன் மீதும் தன் மகள் மீதும் காங்கிரஸ் தலைவா்கள் அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டி டெல்லி உயா் நீதிமன்றத்தில் ரூ.2 கோடி நஷ்டஈடு கோரி மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி அவதூறு வழக்கு தொடுத்துள்ளாா்.

கோவாவில் மத்திய மகளிா், குழந்தைகள் நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி சட்ட விரோதமாக உணவு விடுதி மற்றும் மதுக்கூடம் (பாா்) நடத்துவதாக காங்கிரஸ் தலைவா்கள் குற்றம்சாட்டினா். மேலும், அந்த விடுதி முன்பு காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டமும் நடத்தினா். இந்தக் குற்றச்சாட்டை ஸ்மிருதி இரானியும், அவருடைய மகளின் வழக்குரைஞரும் மறுத்தனா். 18 வயதாகும் சமையல் கலை மாணவியான ஜோயிஷ், எந்த உணவகத்தையும் நடத்தவில்லை என்று ஸ்மிருதி இரானி செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

இந்நிலையில், பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி மத்திய அமைச்சரான தனக்கு எதிராகத் திட்டமிட்டு அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டி ஸ்மிருதி இரானி சாா்பாக காங்கிரஸ் தலைவா்கள் மீது டெல்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறி தனக்கும் தன் மகளுக்கும் எதிராக அவதூறு பரப்பியதற்காக ரூ.2 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் அந்த மனுவில் ஸ்மிருதி கோரியிருந்தாா். மேலும், டுவிட்டா், ஃபேஸ்புக், யூடியூப் என அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த அவதூறு பரவியுள்ளதால், அந்தப் பதிவுகள் அனைத்தையும் நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவா் கோரியிருந்தாா்.

அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் குற்றச்சாட்டுக்கு உள்ளான காங்கிரஸ் தலைவா்கள் இது தொடா்பான சமூக வலைதளப் பதிவுகளை நீக்க வேண்டும். அமைச்சரின் மகள் புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டு கருத்துகளை நீக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும், குற்றச்சாட்டு தொடா்பாக காங்கிரஸ் தலைவா்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பதில் அளிக்காததை தொடர்ந்து, அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட மூவர் தெரிவித்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது” என ஸ்மிருதி தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, “சமூகவலைதளங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பதிவிட்டு உள்ள அவதுாறு கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவைகளை, 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்கள் அவற்றை நீக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை, ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.