செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் நாட்டை சார்ந்த வீரர்கள் இந்த போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்து வெளியேறினர். இந்நிலையில், விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன் முறையாக இந்தியாவில் அதுவும் சென்னையில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து வீரர்களுக்கு சர்வதேச செஸ் போட்டிக்குழு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி பாகிஸ்தான் நாட்டு செஸ் வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் பங்கேற்காமல் திரும்ப சென்றுள்ளனர்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் இம்மாதம் 28 தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது. 1927 முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்தப் போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையைக் கொண்டதாகும். 6 அணிகளில் 30 வீரர்களைக் கொண்டு இந்த போட்டியில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அணியை இந்தியா களமிறக்குகிறது. இந்த போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் 19 பேர், நேற்று காலை புனேவிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில், தமிழக அரசு அதிகாரிகளும், ஒலிம்பியாட் வரவேற்பு குழுவினரும் வரவேற்றனா். பின்பு அவர்களை சொகுசு வாகனங்களில், அவா்கள் தங்கும் இடமான, சென்னை ஓஎம்ஆர் சாலை சிறுசேரியில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அவர்கள் 19 பேரும் நேற்று இரவு திடீரென சிறுசேரி நட்சத்திர விடுதியில் இருந்து சொகுசு வாகனங்களில் புறப்பட்டு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தனா். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புனே செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், அவர்கள் புனேவுக்கு திரும்பி சென்றனர். அவா்களை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனா். இது பரபரப்பான சூழலை ஏற்படுத்திய நிலையில் போட்டியில் பங்கேற்காமல் திரும்பி சென்றதற்கான காரணத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, “செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜம்மு-காஷ்மீர் வழியாக கொண்டு செல்லப்பட்டதாலேயே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து விலகியது” என கூறியுள்ளது.
இதுகுறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “இந்திய வரலாற்றில் சிறப்பான நிகழ்வான 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சதுரங்கம் தோன்றிய இடமான தமிழ் மண்ணில் நடைபெறுவது நமக்கு பெருமை அளிக்கிறது. ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வீடு தோறும் தேசியக்கொடியேற்றும் இயக்கம் தொடங்க இருக்கிறது. அனைத்து பொதுமக்களும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடிகளை ஏற்ற வேண்டும். ஒலிம்பியாட் போட்டிக்கு சதுரங்க கூட்டமைப்பு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பகுதி. எனவே ஒலிம்பியாட் சுடர் எல்லா பகுதிக்கும் செல்லும்” என கூறினார்.