இலங்கைக்கு புதிய நிதி உதவி கிடையாது: உலக வங்கி

இலங்கைக்கு புதிய நிதி உதவி கிடையாது என உலக வங்கி அறிவித்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு, ஜிடிபி, பணவீக்கம் உள்ளிட்டவை இலங்கை பொருளாதாரத்தை வாட்டி வதைக்கிறது. சீனாவிடம் கடன் சீரமைப்பு திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இரு நாட்களுக்கு முன் சர்வதேச செலாவணி நிதியம் அறிவுறுத்தி இருந்தது.

இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கின்றது . வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யக்கூட அரசிடம் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லை. பல்வேறு நாடுகள் , உலக வங்கி, சர்வதேச நிதியத்துக்கு ஏற்கெனவே இலங்கை அரசு கடன் தொகையை தர வேண்டியுள்ளது.

இந்நிலையில் இலங்கையை இப்போதுள்ள மோசமான சூழலிலிருந்து காப்பாற்ற 500 கோடி டாலர் வரை குறைந்தபட்சமாகத் தேவை. ஆனால், இந்தக் கடன் தொகையை வழங்க இதுவரை உலக வங்கி, சர்வதேச நிதியம் ஒப்புக்கொள்ளவில்லை. இதுகுறித்து உலக வங்கி சர்வதேச செலாவணி நிதியம் அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த உலக வங்கி ” இலங்கையில் மேக்ரோ பொருளாதாரக் காரணிகளை சரி செய்யக்கூடிய கொள்கைகளை உருவாக்காதவரை இலங்கைக்கு புதிதாக எந்த நிதி உதவியும் வழங்க திட்டம் ஏதும்இல்லை.

இலங்கையில் மிகவும் ஆழ்ந்த கட்டமைப்பு ரீதியான பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் சீர்திருத்தங்கள் தேவை. பொருளாதாரச் சீரழிவுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய வேண்டும், எதிர்காலத்தில் இந்த பொருளாதாரச்சிக்கலில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கை என்ன என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இலங்கையில் வரும் மேம்பாட்டு, முன்னேற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இலங்கையில் மக்கள் பொருளாதார நெருக்கடியால் படும் அவதி எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இலங்கை மக்களுக்கு உணவு பொருட்கள், மருந்துகள், சமையல் எரிவாயு ,உரம், பள்ளி குழந்தைகளுக்கான உணவு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பணப்பரிமாற்றம் போன்ற உதவிகளை செய்து வருகிறோம் .இலங்கை மக்களின் வளர்ச்சிக்கு உதவிடும் நோக்கில் மற்ற அமைப்புகளுடன் இணைந்து உதவி செய்து வருகிறோம். மேலும் இலங்கை மக்களுக்கு ஆதரவாக இருப்போம் ” என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.