காரில் கட்டுக்கட்டாக பணம்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடி கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்களின் காரில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இர்பான் அன்சாரி, ராஜேஸ், கொங்காரி ஆகிய எம்எல்ஏக்கள், நேற்று மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவுக்கு காரில் வந்தனர். அவர்கள் ஏராளமான பணத்துடன் வருவதாக மேற்கு வங்க மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், ஹவுரா அருகே அவர்களது காரை மறித்து போலீசார் சோதனையிட்டனர். காரில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதை அடுத்து கைது செய்யப்பட்ட எம்எல்ஏக்களிடம் இந்த பணம் யாரிடம் பெறப்பட்டது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது உட்பட பல்வேறு கேள்விகளை போலீசார் எழுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருவதாகவும், இதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பயணித்த காரில் இருந்து கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், காரில் பணத்துடன் சிக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களை, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து, அக்கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்தத் தகவலை, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக, மேலும் அவர் கூறுகையில், “எல்லோரைப் பற்றிய தகவல்களும் எங்களிடம் உள்ளன. வரும் நாட்களில், அது எந்த மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும், கட்சியின் அலுவலகப் பொறுப்பாளராகவோ இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும், இதில் தொடர்புடையவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்” எனக் கூறினார்.

முன்னதாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருவதாகவும், இதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “ஹவுராவில் பணம் பிடிபட்டதன் மூலம் ஜார்க்கண்டில் பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ அம்பலமாகி உள்ளது. டெல்லியில் இருந்தபடி மகாராஷ்டிராவில் ஆட்சியை கலைத்ததை போல் ஜார்கண்டிலும் செய்ய வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்” என குறிப்பிட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாகூர் கூறுகையில், ‛‛மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்க்க அசாமில் எம்எல்ஏக்களை தங்க வைக்கப்பட்டனர். இதனால் அசாம், ஆட்சி கலைப்புக்கான மையப்புள்ளியாக மாறியது என்பது நமக்கு தெரியும். அதேபோல் தற்போதும் பாஜகவினர் சதிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். வரும் நாட்களில் இது தெளிவாக புரியவரும். வரும் காலங்களில் விஷயங்கள் தெளிவாகும்” என்றார்.

இதற்கிடையே தான் பிடிபட்ட எம்எல்ஏக்களிடம் பணம் எங்கிருந்தது கிடைத்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க அமைச்சர் சஷி பஞ்சா கூறியுள்ளார். இதற்கிடையே மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் சம்பவம் குறித்து மத்திய விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும் எனும் வகையில் பதிவிட்டுள்ளது. இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ‛‛ குதிரை பேரம் மூலம் ஜார்கண்டில் நடக்கும் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக முணுமுணுப்புகள் உள்ளன. இதற்கிடையே தான் காங்கிரஸ் கட்சியின் 3 எம்எல்ஏக்களிடம் மேற்கு வங்கத்தில் பணம் சிக்கியுள்ளது. இந்த பணத்துக்கான ஆதாரம் என்ன? என்பது பற்றி ஏதேனும் மத்திய ஏஜென்சி தானாக முன்வந்து விசாரணை நடத்துமா? அல்லது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே விதிகள் பொருந்துமா?” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே எம்எல்ஏ இர்பான் அன்சாரியின் சகோதரர் இம்ரான் இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுத்துள்ளார். இதுபற்றி இம்ரான் கூறுகையில், ‛‛ எனது சகோதரரை வழக்குகளில் சிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது. எனது சகோதரர் ஒவ்வொரு ஆண்டும் பழங்குடி மக்களுக்கு புடவை உள்ளிட்டவற்றை பரிசாக வழங்குவார். பழங்குடி மக்களுக்காக பரிசுகள் வாங்க தான் பணம் கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு ஆண்டை போல் இந்த ஆண்டும் ஜார்கண்டிலிருந்து கொல்கத்தாவின் படா பஜாருக்கு பொருட்கள் வாங்க சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்படவில்லை. நான் அவர்களை சந்திக்க முயற்சிக்கிறேன். ஆனால் போலீசார் அனுமதி தரவில்லை” என்றார்.